மேட்டூர்: மேட்டூர், 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தில், மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்மழை காரணமாக, தமிழகத்தின் மின்தேவை குறைந்தது. இதனால், கடந்த ஒரு வாரமாக மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில், ஒரு அலகில் மட்டும், 210 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது. இரு நாட்களுக்கு முன்பு, மின்தேவை சற்று அதிகரித்ததால் கடந்த, 30 அதிகாலை உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டூர், 600 மெகாவாட் புதிய அனல்மின் நிலையத்தில், மீண்டும் மின் உற்பத்தி துவங்கப்பட்டது. இந்நிலையில், கடற்கரையோர மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்ததால் தமிழக மின்தேவை, 11 ஆயிரம் மெகாவாட்டிற்கும் கீழே சரிந்தது. நேற்று முன்தினம் மின்தேவை, 10 ஆயிரத்து, 95 மெகாவாட்டாகவும், நேற்று, 10 ஆயிரத்து, 517 மெகாவாட்டாகவும் இருந்தது. மின்தேவை குறைந்ததால் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது.