நாமக்கல்: 'உரிமமில்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் போலீஸ் எஸ்.பி., அருளரசு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சேந்தமங்கலம், எருமப்பட்டி, கொல்லிமலை, போதமலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், தங்கள் விவசாய பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பதற்கும், மலைப்பகுதிகளில் வேட்டையாடவும் உரிமம் பெறாமல், கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர். மேலும், பயன்படுத்த முடியாத நிலையிலும், உபயோகம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளின் உதிரி பாகங்களை வைத்திருப்பதும் சட்ட விரோதம். அறியாமையின் காரணமாக, கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர், தங்கள் வசம் உள்ள துப்பாக்கியை, ரகசிய இடத்தில் வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது 94981 01020, 04286 280500 ஆகிய எண்களிலோ, 'Nச்ட்டுச்திச்டூ' (நம்காவல்) செயலியிலோ மாவட்ட தனிப்பிரிவிற்கோ தகவல் தெரிவித்தால், காவல் துறையினர் அவ்வகை துப்பாக்கிகளை பறிமுதல் செய்வர். மேலும், அவர்கள் மீது எவ்வித சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டோம். அவ்வாறு இல்லாமல் கள்ள துப்பாக்கிகளை தனிநபரிடம் இருந்து காவல், வனத்துறையினர் மூலம் கைப்பற்றினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், சேந்தமங்கலத்தில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கி வைத்து மிரட்டியதற்காகவும், ராசிபுரம் போதமலை மற்றும் எருமப்பட்டி மலையடிவாரத்தில், கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும், துப்பாக்கிகளை கைப்பற்றி, வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனர். யாராவது துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தால், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.