நாமக்கல்: இரண்டு கட்டமாக நடக்கும் உள்ளாட்சி தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில், 3,106 பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை, 8.61 லட்சம் வாக்காளர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளான மேயர், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல், 2016 முதல் நடத்தவில்லை. அதனால், எப்போது தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்த்தில், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் இருந்தனர். இந்நிலையில், ஒரு வழியாக நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. வரும், 27 மற்றும், 30ல் என, இரண்டு கட்டமாக நடக்கும் தேர்தலில், கிராம ஊராட்சிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை. நாமக்கல் மாவட்டத்தில், ஐந்து நகராட்சி, 19 பேரூராட்சி, 15 ஒன்றியம், 322 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 116 ஆண்கள், நான்கு லட்சத்து, 38 ஆயிரத்து, 749 பெண்கள், 31 பேர் இதரர் என, மொத்தம், எட்டு லட்சத்து, 60 ஆயிரத்து, 896 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 17, கிராம ஊராட்சி தலைவர், 322, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 172, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,595 என, மொத்தம், 3,106 பதவிக்கு, முதல் கட்டத் தேர்தல் நடக்கிறது.
இதுகுறித்து, தேர்தல் நடத்தும் துறையினர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், இரண்டு கட்டமாக நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்காக, 1,729 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தல் பணியில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு, 30 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.