இந்த செய்தியை கேட்க
புதுடில்லி : அந்தமானின் போர்ட் பிளேர் அருகே இந்திய கடற்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட சீன கப்பலை இந்திய கடற்படை கப்பல் விரட்டியடித்தது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேர் அருகே, சீனாவின் ஷி யான் 1 என்ற சீன ஆராய்ச்சி கப்பல், ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இதனை, அந்த பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த , இந்திய கடலோர பாதுகாப்பு கண்காணிப்பு விமானம் கண்டுபிடித்தது
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்திய கடல் பகுதி மற்றும் தென் கிழக்கு ஆசிய பகுதியில், கடலோர பாதுகாப்பு குறித்து இந்தியா கண்காணித்து வருகிறது. இந்த பகுதிகளில், இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து சீன கப்பல் ஆய்வு செய்து கொண்டிருந்தது. இதனை கண்டுபிடித்த இந்திய அதிகாரிகள், இந்தியன் எக்ஸ்குளுசீவ் பொருளாதார மண்டல பகுதியிலும் சீன கப்பல் ஆய்வு செய்ததையும் கண்டறிந்தனர்.
இந்த பகுதியில், வெளிநாடுகள் ஆய்வு செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து இந்திய கடற்படை கப்பல் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய கடற்படடை கப்பல் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, சீன கப்பல் அங்கிருந்து கிளம்பி, சீனா நோக்கி சென்றது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கடல் பிராந்தியத்தின் சீனாவின் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தீவிரமாக கண்காணித்து வருகிறது. சமீபத்தில் கூட, இந்திய கடல் பகுதியில், 7 சீன கடற்படை கப்பல்கள் ஆய்வு செய்ததை, இந்திய கடற்படை கண்டுபிடித்தது. சீன கப்பலின் புகைப்படங்களை எடுத்துள்ளது. கடற்கொள்ளைக்கு எதிரான ரோந்து எனக்கூறி, சீன கப்பல்கள் இந்திய கடல்பகுதிக்குள் நுழைகின்றன. அந்த கப்பல்களில் அணு ஆயுதங்கள் உள்ளதால், சீனாவின் கூற்றை ஏற்க இந்தியா மறுத்து வருகிறது.