இந்த செய்தியை கேட்க
கோவை : கோவையில் பிறந்த நாளன்று, பிளஸ் 1 மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவன் கோவை மகளிர் கோர்ட்டில் சரணடைந்தான்.
கோவையை சேர்ந்த பிளஸ்1 படிக்கும், 17 வயது மாணவி கடந்த, 26ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆண் நண்பருடன் பார்க்கில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். இரவு, 08.00 மணிக்கு இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆறு பேர் கும்பல் வழிமறித்து, இருவரையும் மறைவான இடத்துக்கு அழைத்து சென்றது.
அங்கு வைத்து, மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரின் ஆடைகளை மிரட்டி அகற்றினர். இதனை போட்டோ மற்றும் 'வீடியோ'எடுத்தனர். பின், வாலிபரை தாக்கியவர்கள், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதன்பின், மாணவியை மிரட்டி அனுப்பி வைத்தவர்கள், தங்களிடம் ஆபாச வீடியோ இருப்பதால் மீண்டும் அழைக்கும்போது வர வேண்டும் என்றனர். வீடு திரும்பிய மாணவி, மறுநாள் தாயிடம் சம்பவத்தை விவரித்தார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோவை மாநகர மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரித்து, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல், 22, பிரகாஷ், 22, கார்த்திகேயன்,28, நாராயணமூர்த்தி, 30 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.இவர்கள் மீது போஸ்கோ சட்டம், கொலை மிரட்டல், ஆபாசமாக வீடியோ எடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உள்பட இருவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி ராதிகா முன்னிலையில் மணிகண்டன் சரணடைந்தான்.