நாகர்கோவில் : 'உங்களுக்கு, 2.75 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது' என, 'வாட்ஸ் ஆப்' தகவலை நம்பி, கன்னியாகுமரியை சேர்ந்தவர், 8 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் அருகே, ஜேம்ஸ் டவுனைச் சேர்ந்தவர், ஜேக்கப்ராஜா, 42. இவரது, 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு, செப்., 27-ல் வந்த தகவலில், 'வாட்ஸ்ஆப் குளோபல் அவார்டு வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். 2.75 கோடி ரூபாய் கிடைக்கும்' எனக் கூறப்பட்டிருந்தது.இதை நம்பிய ஜேக்கப்ராஜா, தகவலில் இடம்பெற்றிருந்த எண்ணை தொடர்பு கொண்டு, 'பரிசு பெற, என்ன செய்ய வேண்டும்' என, கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த மர்மநபர்கள், ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்து, குறிப்பிட்ட தொகையை செலுத்த கூறியுள்ளனர். இதன்படி, பல தவணைகளாக, 8.10 லட்சம் ரூபாயை, 'ஆன்லைன்' வழியாக, அந்த வங்கி எண்ணிற்கு செலுத்தியுள்ளார். ஆனால், பரிசு தொகையை கொடுக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜேக்கப்ராஜா, போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்படி, மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த ராகுல், நெல்சன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.