இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சடலத்தை சுமந்து சென்ற அவலம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சடலத்தை சுமந்து சென்ற அவலம்

Added : டிச 03, 2019

பெரம்பலுார் : அரியலுார் அருகே, தொடர் மழை காரணமாக, இடுப்பளவு தண்ணீரில், சடலத்தை மயானத்துக்கு துாக்கிச் சென்றனர்.

அரியலுார், உடையார்பாளையம் அருகே, கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி என்பவரின் மனைவி கோசலம், 83; உடல்நலக் குறைவால், நேற்று முன்தினம் இரவு இறந்தார். கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரிக்கு அருகே உள்ள மயானத்துக்கு, கோசலத்தின் உடலை, உறவினர்கள் நேற்று துாக்கிச் சென்றனர்.இப்பகுதியில், சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, நைனார் ஏரிக்கு தண்ணீர் செல்லும் ஓடையில், இடுப்பளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நைனார் ஏரி ஓடை தண்ணீரில், சடலத்தை சுமந்தபடி இறங்கி நடந்து, மயானத்தை அடைந்தனர். அங்கு, கோசலத்தின் உடல் புதைக்கப்பட்டது.கோசலத்தின் உறவினர் வேலுமணி, 50, கூறியதாவது: நைனார் ஏரியின் மேற்கே கிராமமும், கிழக்கே மயானமும் உள்ளது. எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்தே, மழை காலங்களில் வெள்ளம் வரும் போது, இவ்வாறு ஓடை தண்ணீரில் இறங்கி, சடலத்தை துாக்கிச் சென்று வருகிறோம்.அதிகாரிகள், அரசியல்வாதி களிடம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த ஆண்டும் இதேபோல், மழை காலங்களில் ஒருவர் இறந்தார்.

அப்போதும், ஓடையை கடந்து சென்று சடலத்தை புதைத்து வந்தோம்.சடலத்துடன், ஓடையை கடக்கும்போது, வெள்ளம் கூடுதலாக வந்தால், நிலைமை மோசமாகி விடும். எனவே, அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, மயானத்துக்கு பாதை வசதி செய்து தருவதோடு, ஓடையின் குறுக்கே பாலமும் கட்டித்தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X