நடிகர் ரஜினியின், 70வது பிறந்த நாளை முன்னிட்டு, வேலுார் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 70 பயனாளிகளுக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலுார், ரங்காபுரத்தில் நடந்தது. திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, '16 வயதினிலே படத்தில் பரட்டை என்ற சிறிய கேரக்டரில் நடிக்க, 5,000 ரூபாய் கேட்டார் ரஜினி. நான், 'சிறிய பட்ஜெட் படம்; அவ்வளவு தர முடியாது' என்றேன். 'சரி, 4,000 ரூபாய் தாருங்கள்' என்றார், ரஜினி. நான், 'முடியாது' என்றேன். பின், '3,000 ரூபாய் தாருங்கள்' என்றார்.
'நான், 'ஓகே' சொன்னேன். ஆனால், கடைசியில், 2,500 ரூபாய் தான் தந்தேன். இப்போதுகூட ரஜினி என்னிடம், 'அண்ணே, அந்த, 500 ரூபாய் பாக்கி இருக்கிறது என கேட்பார்...' என, பேசினார்.
முன்வரிசையில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர், 'தலைவரு கேட்டுக்கூட பாக்கியை தரலையா... இன்னமும்கூட அவருக்கு, நீங்கள் கடனாளி தானா?' என்று, உணர்ச்சி வசப்பட்டு முணுமுணுத்தார். 'இது தான், ரஜினியின் பலம்' என, மூத்த நிருபர் ஒருவர் சொல்ல, அதை சக பத்திரிகையாளர்கள் ஆமோதித்தனர்.