'பல விஷயங்களில், இவர்களுக்குள் தகராறு இருந்தாலும், நேரில் சந்திக்கும்போது, ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கின்றனர்' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியையும், அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், அந்த மாநில மக்கள்.
மேற்கு வங்கத்துக்கும், வங்கதேச நாட்டுக்கும் இடையே பல விஷயங்களில் ஒற்றுமை உள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும், பெரும்பாலும் பெங்காலி மொழி தான் பேசப்படுகிறது. ஆனாலும், ஒரு சில விஷயங்களில், இரு தரப்புக்கும் இடையே பங்காளிச் சண்டை நீடிக்கிறது. 'தீஸ்தா நதி நீரை வங்கதேசத்துக்கு பகிர்ந்தளிக்க முடியாது' என, மம்தா பானர்ஜி பிடிவாதமாக உள்ளார். அதேபோல், வங்கதேசத்தில் உள்ள ஹில்ஷா என்ற சுவை மிகுந்த மீனுக்கு, மேற்கு வங்கத்தில் பெரும் கிராக்கி உண்டு. ஆனால், அதை ஏற்றுமதி செய்வதற்கு, ஹசீனா தடை விதித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான், சமீபத்தில் மேற்கு வங்கத்துக்கு வந்த ஹசீனா, கோல்கட்டாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அவருக்கு ராஜ மரியாதை அளித்தார், மம்தா. பரிசுப் பொருட்கள் கொடுப்பது, இனிப்புகளை பரிமாறுவது, சால்வை அணிவிப்பது என, இருவரும், மாற்றி மாற்றி பாசமழை பொழிந்தனர். மேற்கு வங்க மக்களோ, 'கடவுளே... இதையெல்லாம் நம்புவதா, வேண்டாமா. அபூர்வ சகோதரிகளாக இருக்கின்றனரே' என, ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE