சென்னை : 'போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வுக்கு, ஐந்து திருநங்கையரை அனுமதிக்காவிட்டால், தேர்வு நடவடிக்கை முழுவதற்கும் தடை விதிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வில், துாத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கையர் சாரதா, தேன்மொழி, சென்னையைச் சேர்ந்த தீபிகா ஆகியோர் பங்கேற்றனர். சாரதா, ௩௨; தேன்மொழி, ௩௦; தீபிகா, ௩௨ மதிப்பெண் பெற்றனர். இவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.இந்தப் பிரிவுக்கு நிர்ணயிக்கப்பட்ட, ௪௪ மதிப்பெண் எடுக்காததால், உடல் தகுதி தேர்வுக்கு, இவர்களை அழைக்கவில்லை.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மூவர் உள்ளிட்ட ஐந்து திருநங்கையர், மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, நீதிபதி தண்டபாணி விசாரித்தார்.உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள, ஐந்து பேரையும் அனுமதிக்கவும், அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை, சீலிட்ட உறையில் தாக்கல் செய்யவும், சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு, நவம்பர், ௧௪ல், நீதிபதி உத்தரவிட்டுஇருந்தார். 'இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை' என, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், வழக்கறிஞர் ஆஜராகி தெரிவித்தார்.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, இடைக்கால உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். விதிகளில் திருத்தம் வராமல் நிவாரணம் பெற, திருநங்கையருக்கு உரிமையில்லை என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:மற்ற சாதாரணமான வழக்குகளை போல, இந்த மனுக்களை கருத முடியாது. திருநங்கையருக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருதி, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.
எனவே, நவம்பர், ௧௪ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை, நாளைக்குள் நிறைவேற்ற வேண்டும். உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், இரண்டாம் நிலை கான்ஸ்டபிள் தேர்வு நடவடிக்கை முழுவதற்கும், தடை விதிக்கப்படும். எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கை தாக்கல் செய்ய, நாளை மறுநாளுக்கு வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.