சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மாதர் சங்கத்தினருக்கு பதில் கூறட்டும் பாக்யராஜ்!

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 30 ஆண்டுகளுக்கு முன், சாதாரண காயாக இருந்த முருங்கைக்காயை, முந்தானை முடிச்சு படத்தின் வாயிலாக, ஆபாச பொருளாக காட்டினார், சினிமா இயக்குனர் பாக்யராஜ். இன்று, வயது முதிர்வு காரணமாக, ஞானப்பழமாக மாறி, இல்லவள் மாண்புகளை போதிப்பது, நல்ல வேடிக்கை.ரெட்டை அர்த்த வசனத்தில், ஆபாச படங்கள் பல தந்த இயக்குனர்,
மாதர் சங்கத்தினருக்கு பதில் கூறட்டும் பாக்யராஜ்!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 30 ஆண்டுகளுக்கு முன், சாதாரண காயாக இருந்த முருங்கைக்காயை, முந்தானை முடிச்சு படத்தின் வாயிலாக, ஆபாச பொருளாக காட்டினார், சினிமா இயக்குனர் பாக்யராஜ். இன்று, வயது முதிர்வு காரணமாக, ஞானப்பழமாக மாறி, இல்லவள் மாண்புகளை போதிப்பது, நல்ல வேடிக்கை.

ரெட்டை அர்த்த வசனத்தில், ஆபாச படங்கள் பல தந்த இயக்குனர், அவர்; இன்று பெண்களைக் குறை கூறுவதை, மாதர் சங்கங்கள், சாத்தான் ஓதும் வேதமாகப் பார்ப்பதில் வியப்பில்லை. ஆனால், பாக்யராஜ் கூறியுள்ள கருத்துகளில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. சென்னையில் நடந்த, கருத்துக்களை பதிவு செய் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்யராஜ், 'பாலியல் வன்கொடுமைக்கு பெண்கள் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவதே காரணம். 'பெண்களுக்கு சுயகட்டுப்பாடு இல்லாததால், இவர்கள் பலவீனத்தை, ஆண் சமுதாயம் பயன்படுத்திக்கொள்கிறது. பெருகிவரும் கள்ளக்காதல் மற்றும் அது சார்ந்த பாலியல் குற்றங்களுக்கு பெண்களே காரணம்.

'ஒரு ஆண் மகன், குடும்பத்தில் அப்படி இப்படி இருந்தால், ஒன்றும் குடி மூழ்கி விடாது; ஆனால், அதுவே ஒரு இல்லாள் மாண்பு மறந்து, தறிகெட்டு போனால் குடும்ப விளக்கு அணைந்து, அது, இருண்ட வீடாகி விடும்' என்றார். 'அவரது பேச்சு, ஆணாதிக்க மனோபாவம் உடையது; பெண்களுக்கு மன உளைச்சல் தருவதாக உள்ளது' என, சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்த சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் கலைச்செல்வி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அத்துடன், பாக்யராஜ் மீது, பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார்.

பெற்ற தாய், தந்தையரோ, கற்பிக்கும் ஆசிரியர்களோ கூட, அறிவுரை கூறினால், இன்றைய இளைய சமுதாயத்திற்கு பிடிப்பதில்லை என்பது, கண்கூடு. அப்படியிருக்க, மற்றவர் சொல், இவர்கள் செவியில் விழுமா... பாலியல் தொல்லைக்கு பெண்களே காரணம் என்றால், நாட்டில், இன்று பல் போடாத பாப்பா முதல், பல் போன பாட்டி வரை, வன்முறைக்கு ஆளாவது ஏன்? என்ற கேள்வியை முன் வைத்துள்ளனர், மாதர் சங்கத்தினர்; இது, நல்ல கேள்வி. இதற்கு, பாக்யராஜ் பதில் சொல்ல வேண்டும்!

***


நேர்மையானோரை உருவாக்க என்ன வழி!

அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்று, உலகநாடுகளில் ஊழல் இல்லாத நாடாகவும், கல்வியில் சிறந்த நாடாகவும் விளங்குகிறது, வடஐரோப்பிய நாடான பின்லாந்து; அதற்கு, முக்கிய காரணம், அங்கு வழங்கப்படும் ஒழுக்கமான கல்வி தான்.

தமிழகத்தில், நேர்மையான அரசு அதிகாரிகள் பந்தாடப்படுவதால், அனைத்து அரசுத் துறைகளில், ஊழல் மலிந்து விட்டது. உதாரணமாக, சிலை கடத்தல் தடுப்பு துறை ஐ.ஜி.,யாக பணியாற்றும், பொன்.மாணிக்கவேலை, நேர்மையான வழியில் விசாரணை செய்ய, அரசியல்வாதிகள் விட மறுக்கின்றனர். தமிழக அரசும், அவரை பணி செய்ய விடாமல், தொல்லை கொடுத்து வருகிறது. 'நேர்மையாளராக வாழ வேண்டும்' என்ற உணர்வை, இளைய சமுதாயத்தினர் மனதில் பதிய வைக்கும் வழியில், கல்வி முறை இருக்க வேண்டும். ஆனால், இன்று, பள்ளி கல்வி முதல், கல்லுாரி கல்வி வரை, மாணவர்கள் குறுக்கு வழிகளில், தேர்வுகளில் தேர்ச்சி அடைய, பல முறைகேடுகள் செய்கின்றனர். அவர்கள் கல்வி கற்கும் போதே, ஒழுக்கம் இல்லாதோராக தான் உருவாகி வருகின்றனர்.

இன்று, அனைத்து போட்டி தேர்வுகளிலும், வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் முறைகேடுகள் நடக்கின்றன. பின், எப்படி ஊழல் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும்? லஞ்சம் வாங்குவது, பிச்சை எடுப்பது போன்றும், எச்சில் சோறு சாப்பிடுவது போன்றும், அவமானகரமான காரியம். இளைய சமுதாயத்தினர் மனதில், 'லஞ்சம் தவிர்ப்போம்' என்ற வாசகத்தை பதியும்படி, கல்வி முறை மாற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, பின்லாந்து நாட்டின், கல்வி முறையை பின்பற்றி நடைமுறை படுத்த வேண்டும். அப்போது தான், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போன்று, நேர்மையானவர்களை உருவாக்க முடியும்!

***


நெடுஞ்சாலை துறைக்கு பாரபட்சம் காட்ட வேண்டாம்!

பா.விஜய், வெர்ஜீனியா, அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆயிரக்கணக்கான புதிய பஸ்களை, தமிழக அரசு வாங்குவதாக, அடிக்கடி செய்திகள் வருகின்றன. 'பேட்டரி'யால் இயங்கும் பஸ்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. சென்னையில், பெரிய கார் கம்பெனிகளெல்லாம், தொழிற்சாலை அமைத்து, உற்பத்தி செய்கின்றன. வாகன போக்குவரத்திற்கு, தரமான சாலைகள் மிகவும் அத்தியாவசிய தேவை. நாட்டின் முதுகெலும்பு, சாலைகள் என்றால், அது மிகையில்லை.

நல்ல சாலைகள் அமைப்பதன் வாயிலாக, பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கை தரமும் மேம்படும். விளைந்த மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களை, நுகர்வோரிடம் சேர்க்க முடியும். தொழிற்சாலைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மூலப் பொருட்களை எடுத்து செல்ல, போக்குவரத்து அவசியமாகிறது. இதைவிட சுற்றுலா துறை சீரிய வளர்ச்சி பெற, நல்ல சாலைகள் தேவை. இத்தருணத்தில், பொதுப்பணி துறையின் கீழ் இயங்கும், நீர்வளத் துறைக்கு, ஜூன் முதல் நவம்பர் வரை, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நெடுஞ்சாலைத் துறைக்கு, 100 கோடி ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை.

'எட்டு வழிச்சாலை அமைத்தே தீருவோம்' என, கங்கணம் கட்டி செயல்பட்ட தமிழக அரசு, நெடுஞ்சாலைத் துறைக்கு போதுமான நிதியை ஒதுக்காதது வியப்பை ஏற்படுத்துகிறது. 'மூன்று ஆண்டுகளாக, நெடுஞ்சாலைத் துறைக்கு போதிய நிதியை, தமிழக அரசு ஒதுக்குவதில்லை' என, துறையின் அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். ஏனெனில், நெடுஞ்சாலை துறையும், பொதுப்பணி துறையை போன்று, முதல்வரின் நேரடி கண்காணிப்பிலேயே வருகிறது.

இந்த நிலையில் தான், சாலைகள் புனரமைப்பு, விரிவாக்கம், ரயில்வே மேம்பாலங்கள், கீழ் பாலங்கள், தரைப்பாலங்கள் உள்ளிட்ட பணிகள் நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை விரிவாக்க அறிவிப்புகளை வெளியிடும் தமிழக அரசு, உரிய நிதியை வழங்காமல், இழுத்தடிப்பதாக, அத்துறையினர் விரக்தி அடைந்துள்ளனர். இனியாவது, நெடுஞ்சாலை துறைக்கு போதிய நிதியை ஒதுக்கி, சாலைகளை மேம்படுத்த, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்; முதல்வர் இ.பி.எஸ்., இதில் தனிக் கவனம் செலுத்துவார் என, நம்புவோம்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
04-டிச-201906:13:03 IST Report Abuse
venkat Iyer முனைவர் பட்டாபிராமன் கூறிக் கருத்துக்களை நானும் வரவேற்கின்றேன். கைபேசியினால் பெண் இளம் சமுகம் பாதிக்கப்பட்டு வருவது உண்மை என்பதில் மறுப்பு சொல்வதற்கில்லை. இதற்கு முன் திரு.பாக்கியராஜ் அவரது சினிமா தொழிலும் பெண் சமுகத்தினை தவறான போக்கிற்கு அழைத்து சென்று இருப்பதை( குறிப்பாக அவரது படங்களே )மறுப்பதற்கு இல்லை.கிளி மாதிரி மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி வைத்து கொள்வதில் தவறு இல்லை என்பதை இவரே வீர வசனமாக பேசும் போது ,எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு ,பெண்களுக்கு அறிவுரை கொடுத்துபேசுகிறார் என்று தெரியவில்லை.சின்ன வீடு என்ற படம் பலரை ரியல் வாழ்க்கையில் கீப் வைப்பதற்கு சமுகத்தில் தூண்டியதை யாராலும் மறக்க முடியாது.இன்று உச்ச நீதி மன்றம் பொண்டாட்டியினால் அந்த அற்ப சந்தோஷம் கிடைக்காமல் உள்ள நிலையில் வப்பாட்டி வைத்து கொள்வது சட்ட ரீதியில் தவறு இல்லை என்று கூறிவிட்ட பின்னர், ஆண்கள் ஆனந்த கூத்தாடுகின்றனர். இதுவே பெண் அப்படி செய்தால் அவளுக்கு வேசி என்ற பெயரும் ,கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகின்றனர்.இதன் உச்ச கட்டமாக கொலை கூட செய்கின்றனர். ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியாக சமுகத்தில் இருக்கின்றனர். காம உணர்ச்சிகள் இரு பாலருக்கும் சமமாகத்தான் இயற்கை கொடுத்துள்ளது. ஆனால் பெண் மட்டும்தான் சமுகத்தில் தண்டிக்கப்படுகிறாள். கணவனது ஆண்மையின்மையை மனைவி தாலிக்கட்டிய பாவத்திற்காக வெளியே சொல்ல முடியாமல் தான் மலடி என்ற பெயருடன் பெண்கள் ஏராளமாக இருக்கும் நம் நாட்டில் அவர்கள் வன் கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.அன்று அவர்களுக்கு கணவனை நம்பி வாழவேண்டிய சூழ்நிலை இருந்தது.ஆனால் இன்று சுய சம்பாதித்தியத்தில் பல பெண்கள் வாழ்க்கையை துவங்கும் நிலையில் தனக்கு என்ற தனி சந்தோஷத்தினை எதிர் பார்ப்பதில் தவறு என்ற இருக்கின்றது. கணவன் என்ற பாசத்தினை விடாமல் மறைமுக உறவினை கட்டுப்பாடுடன் வைத்து கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. பாக்கியயராஜ் சார் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று ஆணாதிக்க சமுகத்தில் இருந்து தொடர்ந்து பேசுவதை விடுத்து பெண்ணின் தற்கால சூழ்நிலையை உணர்ந்து பேசுங்கள் என்பது எனது வாதமாக வைக்கின்றேன்.அடிமைத்தனமாகவே வைத்து பேசுவதாக உணர்கின்றேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X