புதுடில்லி: மத்திய அரசு துறைகளில், 'குரூப் - பி மற்றும் சி' பிரிவுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான பணியிடங்களுக்கு, பொதுத் தேர்வு நடத்தி, ஊழியர்களை தேர்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 'இதற்காக சிறப்பு அமைப்பு மூலம், தேர்வு நடத்தப்படும்' என, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதன் வாயிலாக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.எப்.ஓ.எஸ்., ஆகியவற்றுக்கான அதிகாரிகளை நியமித்து வருகிறது. அத்துடன், மத்திய அரசு துறைகளில், 'குரூப் - ஏ மற்றும் குரூப் - பி' பிரிவுகளில், உயர் அதிகாரிகளையும் நியமித்து வருகிறது.
பணியிடங்கள் காலி:
இதை தவிர, 'குரூப் - பி மற்றும் சி' பிரிவுகளுக்கான ஊழியர்களை, எஸ்.எஸ்.சி., எனப்படும் ஸ்டாப் செலக் ஷன்கமிஷன், தேர்வு நடத்தி நியமித்து வருகிறது. வங்கிகள், ரயில்வே உட்பட பல பொதுத் துறைநிறுவனங்கள், தனித்தனியே தேர்வு நடத்தி, ஊழியர்களை தேர்வு செய்துவருகின்றன. இந்நிலையில், அரசு துறைகளில், 'குரூப் - பி, குரூப் - சி' பிரிவுகளுக்கும் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் ஊழியர்களை தேர்வு செய்ய, ஒரு தனி அமைப்பு மூலம், பொதுவான தேர்வு நடத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இது பற்றி, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி, பல புதிய முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 'குரூப் - சி' பிரிவில், 5 லட்சத்து, 74 ஆயிரத்து, 289 பணியிடங்களும்; 'பி' பிரிவில், 89 ஆயிரத்து, 638 பணியிடங்களும்; 'ஏ' பிரிவில், 19 ஆயிரத்து, 896 பணியிடங்களும் காலியாக உள்ளன.
2.5 கோடி:
ஆண்டுதோறும், மத்திய அரசின், 1.25 லட்சம் பணியிடங்களுக்கு, 2.5 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். இவர்கள், பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. ஆனால், இந்த பணியிடங்கள் அனைத்துக்கும், ஒரே மாதிரியான தகுதி தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் தேர்வும், பல அடுக்குகளை கொண்டதாக உள்ளது. ரயில்வே, வங்கிகள் உட்பட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களிலும், ஒரே மாதிரி தகுதியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, பல விடைகளில் சரியான ஒன்றை தேர்வு செய்யும் வகையிலான, 'ஆன்லைன்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டங்களாக, எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு, திறன் தேர்வு என, பல தேர்வுகளில் விண்ணப்பதாரர்கள் பங்கேற்க வேண்டியுள்ளது.
விண்ணப்பதாரர்கள், பல கட்ட தேர்வுகளில் பங்கேற்பதுடன், பல முறை விண்ணப்ப கட்டணங்களும் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், தேர்வுகளுக்காக பல இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து செலவும் ஏற்படுகிறது; ஊழியர்கள் தேர்வும் தாமதப்படுகிறது. இதை தவிர்க்கவே, 'குரூப் - பி, குரூப் - சி' பிரிவுகளுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும், ஊழியர்களை தேர்வு செய்ய, ஒரே பொதுத் தேர்வை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்வு, ஒரு தனி அமைப்பு மூலம் நடத்தப்படும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வசதி செய்து தரப்படும். இந்த பொதுத் தேர்வு, பட்டப் படிப்பு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு என, தனித்தனியாக நடத்தப்படும்.
மூன்று ஆண்டுகள்:
இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண் விபரம், சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்கப்படும். இந்த மதிப்பெண், மூன்று ஆண்டு வரை செல்லுபடியாகும். மேலும், இந்த மதிப்பெண்ணை அதிகரிக்க, விண்ணப்பதாரர்கள், மேலும் இரண்டு முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். எதில், அதிக மதிப்பெண் வாங்கியுள்ளனரோ, அந்த மதிப்பெண் தான் இறுதியில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்ணை வைத்து, மத்திய அரசு துறைகளுக்கும், ரயில்வே மற்றும்வங்கிகள் போன்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு, அந்தந்ந நிறுவனங்கள், இறுதி கட்டமாக ஒரு தேர்வு நடத்தி, தேர்வு செய்யலாம்.
இந்த மதிப்பெண்ணை, மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், ஊழியர்களை தேர்வு செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். இது பற்றி, மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பொதுத் துறை நிறுவனங்களிடம், கருத்து கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE