புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் அங்கு பயங்கரவாதிகளின் வன்முறை சம்பவம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் எல்லையில் ஊடுருவும் முயற்சி அதிகரித்துள்ளது' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது ஜம்மு - காஷ்மீர் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்து மூலம் அளித்துள்ள பதில்களில் கூறியுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ஆக. 5ல் நீக்கப்பட்டது. ஆக. 5 முதல் நவ. 27 வரையிலான 115 நாட்களில் 88 பயங்கரவாத வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. அதே நேரத்தில் ஏப். 12 - ஆக. 4 காலத்தில் 106 சம்பவங்கள் நடந்தன.
அதேபோல் ஆக. 5 முதல் அக். 31 வரையிலான 88 நாட்களில் எல்லையில் ஊடுருவும் முயற்சி 84 முறை நடந்துள்ளது. அதே நேரத்தில் மே 9 - ஆக. 4 வரையிலான காலத்தில் 53 முயற்சிகள் நடந்தன. இந்த ஆண்டில் மட்டும் 157 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆக. 5க்குப் பின் ஜம்மு - காஷ்மீரில் 19 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் நம் நாட்டுக்கு எதிராக பொய் தகவல்கள் எல்லைக்கு அப்பாலில் இருந்து பரப்பப்படுகிறது. அதை தடுக்கவே ஜம்மு - காஷ்மீரில் 'இன்டர்நெட்' சேவை முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
யூனியன் பிரதேசங்களின் எல்லை:
லோக்சபாவில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது அரசியல் சாசனம் நடைமுறைக்கு வருவதற்கு முன் இருந்த ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பகுதிகள் அடங்கியதாகும். அதில் லடாக் மட்டும் சேராது. அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சேரும். லடாக் யூனியன் பிரதேசத்தில் லே மற்றும் கார்கில் மாவட்டங்கள் அடங்கும். லே மாவட்டத்தில் பாக். சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள கில்கிட், கில்கிட் வசாரட், சில்ஹால் உள்ளிட்டவை அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE