சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜவுளிக்கடை உரிமையாளர் கைது

Added : டிச 04, 2019
Advertisement

மேட்டுப்பாளையம் : வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஜவுளிக்கடை உரிமையாளரை கைது செய்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே அவுட் அருகே, சக்கரவர்த்தி துகில் மாளிகை ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியத்தின் வீடு உள்ளது. வீட்டை சுற்றிலும், 15 அடி உயரத்துக்கு கருங்கல் காம்பவுண்ட் சுவர் எழுப்பியிருந்தார்.இந்த காம்பவுண்ட் சுவர், டிச.,1 இரவு பெய்த கனமழையில் இடிந்து, அருகேயிருந்த ஓட்டு வீடுகள் மீது விழுந்தது. இதில், நான்கு வீடுகளில் துாங்கிக் கொண்டிருந்த, 17 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேட்டுப்பாளையம் வி.ஏ.ஒ., கார்த்திகேயன் கொடுத்த புகாரில், சிவசுப்ரமணியம் மீது, இந்திய தண்டனை சட்டம் 304 (2) மற்றும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர்.பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., மணி தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த அவரை தேடினர். முடிவில், மேட்டுப்பாளையம் அடுத்த குட்டையூர் மாதேஸ்வரன் மலை அருகே பதுங்கியிருந்த சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டார்.

அவரை வரும் 17ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க, மதுக்கரை மாஜிஸ்திரேட் ரெஹனா பர்வீன் உத்தரவிட்டார்.பிரிவு 304 (2) சொல்வது என்ன?ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது, முதலில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 'ஏ'ன்படி வழக்கு பதியப்பட்டது. அஜாக்கிரதையாக ஒரு செயலை செய்து, அதன் மூலம் யாருக்காவது மரணம் ஏற்படுத்தும் குற்ற சம்பவங்கள், இந்த சட்டப்பிரிவில் விசாரிக்கப்படும்.

இதற்கு அதிகபட்சமாக, அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஆனால், நேற்று இந்த வழக்கில் 304 'ஏ' பிரிவுக்கு பதிலாக, 304 (2) பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு கூறுவது என்னவெனில், தன் செயலால் ஒருவருக்கு மரணம் ஏற்படும் என்று தெரிந்தே ஒரு குற்றச்செயலை செய்வதாகும். இந்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக, 10 ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
சிக்கியது எப்படி?
காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததும், வீட்டு உரிமையாளர் சிவசுப்ரமணியம் தப்பி தலைமறைவாகி விட்டார். அவர் பதுங்கியிருக்கும் இடம் பற்றி, அவரது இரண்டு மகன்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரை தொடர்பு கொண்ட சிவசுப்ரமணியம், தனது இருப்பிடத்தை தெரிவிக்க மறுத்தார். 'மகன்களை கைது செய்வோம்' என, போலீசார் தெரிவித்ததை அடுத்து, நேற்று தனது இருப்பிடத்தை சிவசுப்ரமணியம் கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரது மகன்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X