சபரிமலை : 'மிஷன்கிரின்' சபரிமலை திட்டத்தில் சபரிமலை செல்லும் பாதைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணி தொடங்கியது.
சபரிமலை காடுகளை பாதுகாக்க பிளாஸ்டிக்கை தவிர்க்க குடிநீர் பாட்டில்கள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பிளாஸ்டிக் குறைந்துள்ளது. ஆனாலும் உணவு பொருட்கள் பேக்கிங் கவர்கள், இருமுடி பையில் கொண்டு வரும் பூஜை பொருட்களின் பாலிதீன் கவர்கள் சவாலாகவே உள்ளது. உணவு பொருட்களின் பேக்கிங் கவர்கள் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போதே வெளியில் வீசப்படுகிறது. இது காடுகளை பாதிக்கிறது.இவற்றை சேகரித்து மறுசுழற்சி செய்ய 'மிஷன் கிரீன் சபரிமலை திட்டம்' அமல்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை பாதையில் ளாகா முதல் பம்பை, கணமலை முதல் பம்பை என பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. வனத்துறையின் சுற்றுச்சூழல் காவலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சேகரிக்கும் கழிவுகளை திருவல்லாவை சேர்ந்த நிறுவனம் மறுசுழற்சிக்காக எடுத்து செல்கிறது.பத்தணந்திட்டை மாவட்ட நிர்வாகம் இந்த திட்டத்தை கண்காணிக்கிறது. விழிப்புணர்வு நடவடிக்கையால் பிளாஸ்டிக் குறைந்தாலும், முழுமையாக தவிர்க்க பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.