பள்ளி மதிய உணவில் செத்த எலி

Added : டிச 04, 2019
Advertisement

லக்னோ : உத்தர பிரதேசத்தில் உள்ள பள்ளியில், மதிய உணவு பாத்திரத்தில், எலி செத்துக் கிடந்ததை அடுத்து, அந்த உணவை சாப்பிட்ட ஒன்பது மாணவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

மற்ற மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன் விபரம் தெரிந்ததால், பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது.உ.பி.,யில், உள்ள 1.5 லட்சம் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில், மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள், பயன் அடைவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், மதிய உணவு திட்டத்தில், பல்வேறு சர்ச்சைகளில் உ.பி., அரசு, சமீபமாக சிக்கி வருகிறது.

கடந்த செப்டம்பரில், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில், மாணவர்களுக்கு சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ள உப்பு வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளியில், ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து, 81 குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சம்பவம், சமீபத்தில் அம்பலத்துக்கு வந்தது. இந்த சர்ச்சை முடிவதற்குள்ளாகவே, அதிர்ச்சி தரும் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

முசாபர்நகரில் உள்ள பள்ளியில், 6 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள், நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட பருப்பில், எலி ஒன்று செத்து கிடந்ததை கண்டு, மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக, மாணவர்களுக்கு உணவு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. அதற்குள், 15 பேர் உணவை சாப்பிட்டு விட்டனர். இதில், ஒன்பது மாணவர்கள், ஒரு ஆசிரியர் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை முடிந்து, ஒரு மணி நேரத்தில், அவர்கள் வீடு திரும்பினர். இந்த சம்பவம், உ.பி., மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பள்ளிக்கு, ஹபூர் மாவட்டத்தை சேர்ந்த, ஜன் கல்யாண் சன்ஸ்தா கமிட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மதிய உணவை சமைத்து தருவது தெரியவந்தது.'அலட்சியமாக செயல்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் மீது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X