புதுடில்லி: பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி பா.ஜ. - எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றுமுன்தினம் லோக்சபாவில் நடந்த வரி விதிப்பு சட்டத்திருத்த மசோதாவின் மீதான விவாதத்தில் லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில் நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் திடமான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுகிறார். எனவே அவரை 'நிர்பலா' சீதாராமன் என அழைக்கலாம்' என்றார்.
'நிர்பலா' என்றால் ஹிந்தியில் 'பலவீனமானவர்' என்று அர்த்தம். அதனால் இந்த விமர்சனம் சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக நிர்மலா சீதாராமன் பேசுகையில் நிர்மலா என்றால் பரிசுத்தம். நான் எப்போதும் பரிசுத்தமாகவே இருப்பேனே தவிர பலவீனமானவளாக இருக்க மாட்டேன்' என்றார்.
அடுத்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் குறித்து பேசிய போதும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் 'வந்தேறிகள்' என குறிப்பிட்டதால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ. - எம்.பி.க்கள் நேற்று லோக்சபாவில் கடும் அமளியில் இறங்கினர்.
அப்போது பா.ஜ. - எம்.பி. பூனம் மகாஜன் பேசியதாவது: நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சர் என்றும் பாராமல் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் எம்.பி. இழிவுபடுத்தி பேசுகிறார். ஒரு பெண் தலைமையில் உள்ள கட்சியில் அவர் தயவில் இருந்து கொண்டு பேசும் நீங்கள்தான் பலவீனமானவர். பா.ஜ.வில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரும் தீரம் மிக்கவர்கள்.
பெண்களுக்கு உரிய மரியாதை தருபவர் எங்கள் பிரதமர். அமைச்சரவையிலும் உயர் பொறுப்புகளிலும் பெண்களை அதிக எண்ணிகையில் இடம்பெறச் செய்தவர் அவர். பலவீனமான உங்களுக்கு பிரதமரையும் உள்துறை அமைச்சரவையும் 'வந்தேறிகள்' என குறிப்பிட தகுதியில்லை.பலவீனம் என்பதற்கு நிஜமான அர்த்தமே காங்கிரஸ்தான். இவ்வாறு பூணம் மகாஜன் பேசினார்.
அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் வெங்காய விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பெரும் அமளிக்கு மத்தியில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது: வெங்காயத்தின் விலை விண்ணில் பறக்கிறது. 'இடைத்தரகர்களே என் ஆட்சியில் இருக்க மாட்டார்கள்' என பிரதமர் கூறினார். ஆனால் நடப்பது வேறாக உள்ளது.அத்தியாசியப் பொருட்களின் விலை கடுமையாக ஏறி வருகிறது. பதில் கூற வேண்டிய அரசோ மவுனம் காக்கிறது இதை ஏற்க முடியாது. இவ்வாறு கூறியவுடன் அரசை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் பேசியதாவது: புளூவேல் போன்ற 'ஆன்லைன்' விளையாட்டுகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலரும் உயிரிழக்கின்றனர். கம்யூட்டரிலேயே அதிக நேரம் செலவிடுவதால் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. எனவே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்.
விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர் பேசியதாவது: மதுரை -- கன்னியாகுமரி மதுரை - -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகள் விருதுநகர் வழியே செல்கின்றன. இச்சாலைகளில் மூன்று இடங்களில் எதிரெதிரே உள்ள கிராமங்களை கடக்க மக்கள் சிரமப்படுகின்றனர். இதுவரை விபத்தில் 75 பேர் பலியாகிவிட்டனர். எனவே மேம்பாலங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை எம்.பி. வெங்கடேசன் பேசியதாவது: கோவை அருகே நடூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவரை அனுப்ப வேண்டும். இப்பிரச்னையில் காவல்துறையின் அத்துமீறல்கள் விசாரிக்கப்பட வேண்டும். தீண்டாமை கொடுமையை களைய மாவட்ட அளவில் கண்காணிப்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE