மெரினாவை ரசித்த மாற்றுத்திறனாளிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மெரினாவை ரசித்த மாற்றுத்திறனாளிகள்

Added : டிச 04, 2019
 மெரினாவை ரசித்த மாற்றுத்திறனாளிகள்

சென்னை:சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான நேற்று, சென்னை மெரினா கடற்கரையில், கடல் அலைகளை ரசித்தவாறு, மாற்றுத்திறனாளிகள் உற்சாகமடைந்தனர்.

ஆண்டுதோறும் டிச., 3ம் தேதி, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை வித்யாசாகர் ஊனமுற்றோர் உரிமைகள் இணையம் சார்பில், வாய் பேச முடியாதவர்கள், காது கேளாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில், மெரினா கடற்கரையில் கடல் அலைகளை ரசிக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியை, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், மாநில மாற்றுத்திறனாளிகள் அலுவலக ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.நுாற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள், பெரியவர்கள் பங்கேற்றனர்.அவர்கள், கடற்கரையிலிருந்து கடல் வரை செல்வதற்கு, கடலில் உள்ள மணல் பரப்பில், பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டிருந்தது. இதில், மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில், கடல் வரை சென்று, அலைகளை ரசித்த படி, தண்ணீரில் நனைந்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.

மாற்றுத் திறனாளிகள் கூறியதாவது:நாங்களும், மற்றவர்களை போல, தினமும் மெரினா வந்து கடல் அலைகளையும், காற்றையும் ரசிக்க வேண்டும் என, ஆசையாக உள்ளது. ஆனால், சர்வதேச தினத்தில் மட்டும், இதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பிறரை போல, தினமும் கடற்கரை வந்து அலைகளை ரசிக்க, நாங்கள் வருவதற்காக பிரத்யேக பாதை அமைக்க, மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:மாற்றுத் திறனாளிகள், மணல் பரப்பில் இருந்து கடல் வரை செல்ல, மாநக ராட்சி சார்பில், 720 அடி நீளம், 8 அடி அகலத்தில் பிரத்யேக பாதை அமைக்கப்பட்டது.மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து, 4 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப் பட்ட, பிரத்யேக வாகனம் மூலம், அவர்கள் கடற்கரை மணல் பரப்பில் பயணித்தனர்.இவ்வாறு பிரகாஷ் கூறினார்.நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி உதவி கமிஷனர் ரவிகுமார், 'பர்ஸ்ட் ஜெனரேஷன்' இயக்குனர் ஜெ.எஸ்.சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X