சென்னை:உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, சென்னையின் பல்வேறு இடங்களில், கருத்தரங்கம், போராட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
டிச., 3ம் தேதி, உலக மாற்றுத்திறனாளிகள் தினம் சிறப்பிக்கப்படுகிறது. இதையொட்டி, நேற்று, இ.சி.ஆர்., கானத்துாரில் உள்ள, தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தில், சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.இதில், 2030க்குள், மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சி இலக்குகள், சிறு, குறு தொழிலில், அவர்களை சிறந்த தொழில் முனைவோராக மாற்றுவது குறித்து பேசப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் ஜானிடாம் வர்கீஸ், தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் ஹிமாங்கிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* 'வானம் வசப்படும்' அமைப்பு சார்பில், சோழிங்கநல்லுாரில், மனித சங்கிலி போராட்டம் நடத்தப் பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு, இடஒதுக்கீட்டில் வழங்கப்படும், அரசு வேலை வாய்ப்பு மற்றும் உதவித்தொகை வழங்குவதில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி, இப்போராட்டம் நடத்தப்பட்டது.