அறிவியல் அறிந்து மண்வளம் காப்போம்! நாளை மண்வள தின விழா

Added : டிச 04, 2019
Share
Advertisement
 அறிவியல் அறிந்து மண்வளம் காப்போம்!  நாளை மண்வள தின விழா

ஆண்டுதோறும் டிச.,5 ல் உலக மண்வள தினவிழா கொண்டாடுகிறோம். எல்லா உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் மண். மண்ணில் விளைந்த பயிர்கள், உலகில் அனைத்து உயிரினங்களுக்கும் உணவாகிறது.

'மண்ணின் வளம் மக்களின் வளம்', 'மண்ணின் நலம் மக்களின் நலம்'. மண்ணின் தன்மை அறியாது செய்த விவசாயம் புண்ணின் தன்மை அறியாது செய்த சிகிச்சைக்கு சமம், என்பார்கள். இந்த வழக்கு மொழிக்கு ஏற்ப விவசாய அணுகுமுறை இருப்பது காலத்தின் கட்டாயம். மலடாகும் மண் மண்ணில் வேதியியல் உரங்களின் அதிகம் பயன்படுத்துவதினாலே மண் மலடாகிறது. பரிந்துரைத்த அளவை விட கூடுதலான உரங்கள், தேவையற்ற நேரத்தில் உரமிடுதலால் ஒரு சதுர அடி மண்ணில் இருக்க வேண்டிய 5 லட்சம் கோடி நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அதன் வாழ்வாதாரம், ஸ்திரத்தன்மையை இழக்கிறது.

அந்த நுண்ணுயிரிகள் மறைந்ததால் பயிர்களுக்கு கிடைக்க கூடிய சத்துக்கள் போதிய அளவு கிடைக்காமல், மகசூலை சரியான விகிதாச்சாரத்தில் எடுக்க முடியவில்லை. ஏன் மண்வள தின விழா மண்ணிலே அங்கக சத்து மிக அதிகமாக இருக்க வேண்டும். அறிவியலின் புரிதலோடு இதை பார்த்தால், கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து ஆகியவை 24 க்கு 1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால் மண்ணிலே இதன் விகிதாச்சாரம் மிக குறைவாக இருப்பதால், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் குறைகிறது.

பரிந்துரைத்த அளவை தாண்டி ஒரு கிராம் வேதியியல் உரங்களும், ஒரு மில்லி பூஞ்சாண மற்றும் பூச்சி மருந்துகளும், பயிருக்கும், மண்ணிற்கும், மனிதனுக்கும் மிக கேடு விளைவிக்கும். இதுமட்டுமின்றி மண்ணில் இறுக்கம் அதிகரித்தல், நீர் உட்புகு திறன் குறைதல், மேல் மண் உப்பு படிதல், அமில காரத்தன்மையில் வேறுபாடு காரணமாக மண்ணின் கட்டுமானம் சிதையும். அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக தான் உலகளவில் மண் வள தினவிழா கடைபிடிக்கிறோம். உலக உணவு நிறுவனம்முதன் முதலில் 'உலக மண்வள தினம்' கொண்டாட வலியுறுத்தியது.

'சர்வதேச ஒருங்கிணைந்த மண்ணியல் ஒன்றியம்' தான். 2002ல் உலகளவில் மண் ஆய்வை மேற்கொண்டு மண் மாசுபாட்டால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கிறது என்பதை உலக உணவு நிறுவனத்திடம், ஐக்கிய நாடுகள் ஒருங்கிணைப்பு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அமைப்பு தான் உலக மண் வள தின விழா கொண்டாட வலியுறுத்தியது. உலக உணவு நிறுவனமானது 2013 ஜூனில் தீர்மானம் நிறைவேற்றி, ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின், 62வது அமர்வில் சமர்ப்பித்தது. இதன்படியே உலக மண்வள தின விழா ஆண்டு தோறும் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை தீர்மானமும் நிறைவேற்றி தந்தது.

மண்ணை பாதுகாக்கும் முயற்சியை முதன் முதலில் எடுத்தவர் தாய்லாந்து மன்னர் அதுல்யதேஜ். இவர் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை, நிலைத்த, நீடித்த மண் பாதுகாப்பு மூலம் உறுதி செய்தவர். இவரது பிறந்த நாள் டிச., 5. அன்றைய தினமே உலக மண்வள தினவிழாவாக எடுத்து வருகிறோம்.மண் அரிப்பை தடுத்தல் இதன் முக்கிய நோக்கம் 'கூட்டு பண்ணையும், அதற்கான அடிப்படை ஆதாரம் மண்', என்ற கோட்பாடு தான்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் 'வளமான வாழ்வுக்கு வளமான மண், மண்ணிற்கும் பயிர் வகை பயிர்களுக்குமான தொடர்பு, மண் மூலம் இந்த அண்டத்தினை காப்போம், மண்ணுக்கு தீர்வு காண்போம் ஆகிய கோட்பாடுகளுடன் ஆண்டு தோறும் மண் வள தின விழா நடத்துகிறோம். 2019ல் 'மண் அரிப்பை தடுத்து நம் எதிர்காலம் சேமிப்போம்,' என்ற கோட்பாடுடன் நடத்தப்பட உள்ளது. விவசாயத்தை நம்பி இந்திய மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். விவசாயத்திற்கு அடிப்படை ஆதாரம் மேல்மட்ட மண் தான்.

2 முதல் 3 செ.மீ., அளவிற்கான மேல் மட்ட மண் உருவாவதற்கு ஆயிரம் ஆண்டுகளாகிறது. தற்போது 33 சதவீத மேல்மட்ட மண் பல காரணங்களால் பயனற்று போய்விட்டது. 2050ற்குள் 90 சதவீத மேல்மட்ட மண் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதற்காக தான் இந்த ஆண்டில், மண் அரிப்பை தடுத்து நம் எதிர் காலம் சேமிப்போம்,' என்ற கோட்பாட்டுடன் கொண்டாடுகிறோம்.3 காரணங்கள்மண் அரிப்பானது 3 முக்கிய காரணிகளால் ஏற்படுகிறது. மண் பொதுவாக பொலபொலப்பு தன்மையுடன் விவசாயத்திற்கு உகந்த கரிம, தழைச்சத்து விகிதாச்சாரத்தில் (24:1) இருக்க வேண்டும். இந்த தன்மையில் வேறுபாடு இருந்தால் அந்த மேல் மண் விவசாயத்திற்கு ஏதுவானதாக இருக்காது.

மண் அரிப்பானது மழை வெள்ளத்தாலும், காற்றாலும், தவறான உழவு தொழில் நுட்பங்களாலும் ஏற்படுகிறது. நீரினால் ஏற்படக்கூடிய மண் அரிப்பானது சமதளமில்லா நிலத்தினாலும், சரிவு விகிதாச்சாரம் அதிகமாக இருப்பதினாலும், உயரமான நிலத்திலிருந்து தாழ்வான நிலத்திற்கு நீர் வேகமாக ஓடக்கூடிய ஒரு நிலையிலும் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு ஆங்காங்கே வரப்புகள், மண் மேடுகள், தடுப்பணைகள் கட்டி நீர் சரிந்து ஓடி விடாமலும், இதனால் மண் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

வெட்டிவேர், லெமன் புல் போன்று வரிசைபயிர்களை சாகுபடி செய்வதன் மூலமும், தீவன பயிர்களை மிக நெருக்கமாக வரப்புகளில் சாகுபடி செய்வதனால், நீர் அரிப்பை தடுக்கலாம். காற்று மூலம் ஏற்படும் மண் அரிமானத்தை தடுக்க, சவுக்கு, மூங்கில், மகோகனி, தேக்கு, செம்மரம் போன்ற பயிர்களை வயல்வரப்புகளின் ஓரங்களில் குறுக்கும் நெடுக்கமாக நடும் பொழுது, காற்று தடுப்பானாக இருந்து மண் அரிப்பை தடுக்கிறது. அறிவியல் புரிதல் அதுபோலவே, உழவு கருவிகளை சமதள பரப்பிலே மண்ணை சமதளப்படுத்தியவாறே உழவேண்டும்.

மாறாக சரிவு நிலத்தில் உழவிற்கு தக்கவாறு ஆழ்புழுதி உழவு செய்தல், வேளாண்மைக்கான மேல் மண்கட்டு சிதையாமல் வைத்தல், வேதியியல் உரங்களை குறைத்து இயற்கையோடு இணைந்த அங்கக வேளாண்மையில் விவசாயிகள் ஈடுபட்டாமல் மட்டுமே மண்ணின் வளம் காக்கப்படும். மண்வளம் செழித்தால் பயிர்கள் கொழிக்கும். பயிர்கள் கொழித்தால் பயிரை நம்பிய வேளாண் தொழில் புரிவோர் செழிப்பர். ஆரோக்கிய உணவால் மனித ஆரோக்கியமும் பெருகும்.

-எஸ்.செந்துார்குமரன், தலைவர் வேளாண் அறிவியல் நிலையம்குன்றக்குடி. 94438 69408.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X