கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர் நிலைகளில் மூழ்கி பலியாவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன: ஐகோர்ட்

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை : நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அரசு மற்றும் அறநிலையத்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் கோட்டீஸ்வரி தாக்கல் செய்த மனு:ஆறு, ஏரி, கிணறு, குளம், கடல் என, நீர் நிலைகளில் மூழ்கி பலர் உயிரிழக்கின்றனர். 'செல்பி' மோகத்தில், ஆபத்தை பொருட்படுத்தாமல் விபரீதத்தில் ஈடுபடுவதால், இளைஞர்கள், மாணவர்களுக்கு இந்த துயர நிலை ஏற்படுகிறது.நீர் நிலைகளில், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில், அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். நீர் நிலைகளின் ஆழம், அங்கு மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்களையும் குறிப்பிட வேண்டும்.

தேசிய குற்ற ஆவணத்தின்படி, ௨௦௧௪ல் மட்டும், ௧௧ ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். அவ்வாறு இறந்தவர்களில், ௯௦ சதவீதம் பேர், ௧௨ வயதுக்கு உட்பட்டவர்கள். ஐந்து ஆண்டுகளில், நீர் நிலைகளில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து, அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். முக்கிய சுற்றுலா தலங்களில், நீச்சல் நிபுணர்களை நியமிக்க வேண்டும்.சென்னை திருவொற்றியூர் முதல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரம் வரை, கடற்கரையை ஒட்டி சுவர் அமைக்க வேண்டும்.

நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கோவிலை ஒட்டிய ஆறு, குளம், கடல் போன்ற நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விபரங்களை, அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.

நீர் வீழ்ச்சி மற்றும் நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, கலெக்டர்கள் வழியாக அறிக்கை பெற்று, அரசு தாக்கல் செய்ய வேண்டும்.ஓராண்டில், நீர் நிலைகளில் மூழ்கி இறந்தவர்கள் மற்றும் கோவில் விழாக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை விபரங்களை, போலீசிடம் பெற்று, சிறப்பு பிளீடர் தாக்கல் செய்ய வேண்டும். இத்தகைய உயிரிழப்புகள் நேராமல் தடுக்க, மாநில அரசுக்கு ஒதுக்கிய நிதி விபரங்களை, மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையையும், நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X