ரூ.100 கோடி மோசடி வழக்கு சிக்கினார் திருவொற்றியூர் நபர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.100 கோடி மோசடி வழக்கு சிக்கினார் திருவொற்றியூர் நபர்

Added : டிச 04, 2019
Share
திருவொற்றியூர்:சமூக வலைதளங்கள் வாயிலாக, 100 கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவாக இருந்த திருவொற்றியூர் நபரை, பாதிக்கப்பட்டவர்கள் விரட்டி பிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.அரும்பாக்கத்தில், 'ட்ரீ இந்தியா' என்ற பெயரில், தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில், எவ்வளவு பணம் முதலீடு செய்தாலும், 100 நாட்களில் இரட்டிப்பாக வழங்கப்படும் என, சமூக

திருவொற்றியூர்:சமூக வலைதளங்கள் வாயிலாக, 100 கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவாக இருந்த திருவொற்றியூர் நபரை, பாதிக்கப்பட்டவர்கள் விரட்டி பிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
அரும்பாக்கத்தில், 'ட்ரீ இந்தியா' என்ற பெயரில், தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில், எவ்வளவு பணம் முதலீடு செய்தாலும், 100 நாட்களில் இரட்டிப்பாக வழங்கப்படும் என, சமூக வலைத்தளங்களில், விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.இதை நம்பி, பலர், 5,000 - 10 லட்சம் ரூபாய் வரை, நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்த வகையில், கடந்த ஜூன் -- செப்டம்பர் வரை, 100 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளது. ஆனால், வசூலித்த தொகைக்கு, முதலீடு செய்தவர்களுக்கு இரட்டிப்பாக பணம் வழங்கப்பட வில்லை. மாறாக, வசூலித்த பணத்துடன், பங்குதாரர்கள் தலைமறைவாகினர். இதில், ஒரு பங்குதாரரான திருவொற்றியூரைச் சேர்ந்த ஹரிஸ்வர், 30, உள்ளிட்ட ஆறு பேரை, பாதிக்கப் பட்டவர்கள் தேடினர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, பணத்தை கொடுத்து ஏமாந்த, 30க்கும் மேற்பட்டோர், திருவொற்றியூர், அப்பர் சுவாமி கோவில் தெருவில் உள்ள, ஹரிஸ்வர் வீட்டுக்கு சென்று, முதலீடு செய்த பணத்தை கேட்டுள்ளனர்.அப்போது, ஹரிஸ்வர், தன்னை, 30 பேர் தாக்க வருவதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற திருவொற்றியூர் போலீசார், இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்து வந்து, புகார் கொடுக்கும் படி அறிவுறுத்தினர்.

பாதிக்கப்பட்டவர்கள், திருவொற்றியூர் போலீசாரிடம், புகார் குறித்து தெரிவித்துக் கொண்டிருந்த போது, ஹரிஸ்வர், காரில் தப்பிச் செல்ல முயன்றார். இதை கவனித்த ஏமாந்தவர்கள், ஆத்திரம் அடைந்து, ஹரிஸ்வர் காரை சூழ்ந்து, அடித்து நொறுக்கினர். இதனால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரில் இருந்த ஹரிஸ்வர் உட்பட மூவரை, போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.இந்த வழக்கை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு, திருவொற்றியூர் போலீசார் மாற்றி உள்ளனர். ஹரிஸ்வரை, பொருளாதார குற்றப்பிரிவில், போலீசார் ஒப்படைத்தனர். அங்கு, விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X