நங்கநல்லுார்:குளத்தில் மூழ்கியவரை மீட்க முடியாமல், தீயணைப்பு வீரர்கள் திரும்பினர்.
நங்கநல்லுார், நேரு காலனியைச் சேர்ந்தவர், ரூபன், 29. இவர், 'காஸ்' சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார்.நேற்று காலை பணி முடித்து, நங்கநல்லுாரில் உள்ள, 'டாஸ்மாக்' கடையில், நண்பர்கள் இருவருடன், மது அருந்தினார். பின், அருகில் உள்ள கோவில் குளத்தில் மூவரும் குளித்தனர். அப்போது, மது போதையில் சாகசத்தில் ஈடுபட்ட ரூபன், நீரில் மூழ்கினார்.
அவரை காப்பாற்ற முயன்று முடியாததால், உடன் வந்த இருவரும் தப்பியோடினர். இதை பார்த்த பொதுமக்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து, கிண்டி, திருவான்மியூர், வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து, ரப்பர் படகு உதவியுடன் தேடினர். நேற்று இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து, பழவந்தாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.