தமிழ்நாடு

போட்டி!உள்ளாட்சி அமைப்பில் 6,039 பதவிகளுக்கு...ஊராட்சி தலைவர் ரூ.34,000 செலவழிக்கலாம்

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019
Advertisement
 போட்டி!உள்ளாட்சி அமைப்பில் 6,039 பதவிகளுக்கு...ஊராட்சி தலைவர் ரூ.34,000 செலவழிக்கலாம்

கடலுார்:கடலுார் மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்பில் 6,039 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதையொட்டி மாவட்ட நிர்வாகம் தேர்தல் பணிகளை வேகமாக துவக்கி உள்ளது. கடலுார் மாவட்டத்தில் 5, 040 சிற்றுாராட்சி வார்டு உறுப்பினர்கள், 287 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 683 சிற்றுாராட்சி தலைவர்கள் ஆகிய பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதில் புதியதாக துவக்கப்பட்ட ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய பதவியிடங்களும் அடங்கும்.இது குறித்து கலெக்டர் அன்புச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் எந்தெந்த பகுதிக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் என்பதை ஆணையம் இன்னும் தெரிவிக்கவில்லை.கடலுார் மாவட்டத்தில் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஊரக பகுதிகளில் வாக்காளர்கள் ஓட்டளிக்க ஏதுவாக மொத்தம் 2,888 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வார்டு ஓட்டுச்சாவடி 710; இரண்டு வார்டு ஓட்டுச்சாவடி 2, 178 ஆகும்.ஆண் வாக்காளர்களுக்காக 26 மற்றும் பெண் வாக்காளர்களுக்காக 26 ஓட்டுச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 2, 836 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்களுக்கு ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தல் கட்சி அடிப்படையிலும், சிற்றுாராட்சி வார்டு உறுப்பினர், சிற்றுாராட்சி தலைவர்கள் தேர்தல் கட்சி அடிப்படையின்றி நடக்கும்.கடலுார் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 723 பதற்றமான ஓட்டுச்சாவடிகள், 33 மிக பதற்றமான என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் அலுவலர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிற ஓட்டுச் சீட்டும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சைநிற ஓட்டுச்சீட்டும், ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிற ஓட்டுச்சீட்டும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வெள்ளை மற்றும் இள நீலநிறத்திலும் ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

தேர்தலில் போட்டியிடும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ரூ.9 ஆயிரம் வரையிலும், கிராம ஊராட்சி தலைவர் ரூ. 34 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ரூ. 85 ஆயிரம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யலாம். 14 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X