சென்னை:ஷார்ஜா மற்றும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட, 15.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான, ஷார்ஜாவில் இருந்து, திருவனந்தபுரம் வழியாக, 'ஏர் - இந்தியா' விமானம், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, சென்னை வந்தது.அதில் வந்த, கடலுாரைச் சேர்ந்த பார்த்திபன், 22, என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது, அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்து, 7.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 190 கிராம் தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லையின்ஸ்' விமானம் நேற்று காலை, 8:35 மணிக்கு சென்னை வந்தது.அதில் வந்த, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜபருல்லா கான், 35, என்பவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அவரது ஆசன வாயில் இருந்து, 7.7 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 195 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.