பாலாபிஷேகம்
திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை ராகுகால பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் அம்மன், உட்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.இதே போல், திருத்தணி தணிகாசலம்மன், பரமேஸ்வரி அம்மன், கங்கையம்மன், படவேட்டம்மன் மற்றும் நகரி தேசம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பிளாஸ்டிக் கவர் பறிமுதல்
திருத்தணி: திருத்தணி நகராட்சியில், காய்கறி மற்றும் பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளதாக, தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று, திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் மேற்கண்ட கடைகளில், ஆய்வு நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், 75 கிலோ பறிமுதல் செய்தனர். மேலும், மூன்று கடைகளுக்கு, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.