புதுச்சேரி:'வீடுகளிலும், சுற்றியுள்ள இடங்களிலும் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, பொதுமக்களை, சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் கேட்டுக் கொண்டார்.
அவர் நேற்று அளித்த பேட்டி:வடகிழக்கு பருவ மழை காலத்தில், கொசுக்களின் உற்பத்தி அதிகரிப்பது வழக்கம். எனவே, கொசுக்களால் பரவும் நோய்கள் வேகமாக பரவ வாய்ப்புள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை, 1,352 பேர் டெங்குவாலும், 500 பேர் சிக்குன் குன்யாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். சிக்குன் குன்யாவில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.கடந்தாண்டு 580 பேர் டெங்குவாலும், 620 பேர் சிக்குன் குன்யாவாலும் பாதிக்கப்பட்டனர். மலேரியாவை பொருத்தவரை, புதுச்சேரி மாநிலத்தில் பெரியளவில் பாதிப்பு இல்லை.நோய் பரப்பும் கொசுக்களை கண்டறிவதற்காக, சுகாதாரத் துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தினசரி களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அடையாளம் கண்டு, அழித்து வருகின்றனர். இந்த பணிகளை, கலெக்டர் நேரடியாக மேற்பார்வையிடுகிறார்.பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், கொசுக்களை ஒழிப்பது கடினமானது. எனவே, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்திருக்குமாறு, பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.மழை பெய்து நின்றவுடன் வீட்டின் மாடியிலும், வீட்டை சுற்றியுள்ள இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை பொதுமக்கள் பார்க்க வேண்டும். தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக வழிந்தோட செய்ய வேண்டும். மேலும், டயர், தேங்காய் ஓடுகள், பாத்திரங்கள், உடைந்த பொருட்களிலும், செடிகள் வளரும் ஜாடிகளிலும் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.கொசுக்களால் பரவும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. தேவையான அளவுக்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. டெங்கு காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் இருந்து தட்டணுக்களை பிரித்து செலுத்த வேண்டும். இதற்கு தேவையான அளவுக்கு ரத்தமும் இருப்பு உள்ளது. ரத்ததானம் செய்வதற்கு விருப்பமுள்ளவர்கள் முன்வரலாம்.பொதுவாக மழைக்காலம் துவங்கி விட்டதால், சீதோஷ்ண நிலை மாற்றம் அடைந்துள்ளது. எனவே, தண்ணீரை காய்ச்சி, வடிக்கட்டி குடிப்பது, கை, கால்களை கழுவுவது போன்ற சுகாதாரமான வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, மோகன்குமார் கூறினார். கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புக்கான தேசிய திட்டத்தின் மாநில திட்ட அதிகாரி சுந்தர்ராஜன் உடனிருந்தார்.தொடர்ந்து, மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சுகாதாரத் துறையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும், துறை அதிகாரிகள் மற்றும் சீனியர் டாக்டர்களுடன், இயக்குனர் மோகன்குமார் ஆலோசனை நடத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE