பள்ளிக்கு உதவி
திருப்போரூர்: திருக்கழுக்குன்றம் அடுத்த முடையூர் கிராமத்தில், அரசு உதவி பெறும் ஜார்ஜ் வேணுகோபால் நடுநிலைப் பள்ளி உள்ளது.இப்பள்ளியில், வழுவதுார், கிளாப்பாக்கம், தத்தளூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, 92 மாணவ - -மாணவியர் பயில்கின்றனர். மாணவர்கள், மதிய உணவு உண்பதற்கு போதியளவு தட்டு, டம்ளர் இல்லாமல் இருந்தனர்.இதையறிந்த தன்னார்வலர் ஒருவர், பள்ளி மாணவர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 100 தட்டு, டம்ளர் வழங்கினார்.
கடலுாரில், 'சிப்காட்' அமைக்க மனு
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில், செய்யூர், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், லத்துார் உள்ளிட்ட பகுதிகள், விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலையே பிரதானமாக கொண்டுள்ளன. பிற தொழில் வளம் இன்றி, இப்பகுதியினர், வேலைக்காக, கல்பாக்கம், சென்னை சுற்றுப்புற பகுதிகளுக்கு சென்று வர சிரமப்படுகின்றனர்.இதனால், கடலுார் பகுதியில், 'சிப்காட்' தொழிற்பேட்டை துவங்க வேண்டும் என, மாவட்ட பா.ஜ., தலைவர் மற்றும் பொதுமக்கள், செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லுாயிசிடம், நேற்று முன்தினம் கோரிக்கை மனு அளித்தனர்.