புதுச்சேரி:பா.ஜ.,வின் தொடர் போராட்டத்தால், புதுச்சேரி அரசு, இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., அரசு முற்றிலும் செயல் இழந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளான வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, 30 கிலோ இலவச அரிசி, இலவச மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி, புதிய தொழிற்சாலைகளுக்கு சலுகை உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.இந்த அரசு பொறுப்பேற்ற 42 மாதங்களில், 28 மாதங்கள் மட்டுமே தரமற்ற அரிசு வழங்கியது. மக்களின் புகாரை தொடர்ந்து, அரிசிக்கு பதிலாக மாதம் 600 ரூபாய்வழங்குவதாக அரசு கூறியது. ஆனால், சில மாதங்களுக்கு மட்டும், அரிசிக்கு பதில் பொது மக்களின் வாங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. தரமான அரிசியை கொள்முதல் செய்யாததால், புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 84 டன் அரிசியை, மக்கள் பயன்படுத்த தகுதியற்றது எனவும், 1432 டன் அரிசிக்கு, சப்ளையருக்கு பணம் கொடுக்காமல் தடை செய்யப்பட்டது.இந்நிலையில், மீதமுள்ள 24 மாதங்களுக்கு புதுச்சேரி அரசு அரிசிக்கு பதில் பணமாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்த கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.
ஆனால், பணத்தை வழங்காமல் அமைச்சர் கந்தசாமியும், முதல்வர் நாராயணசாமியும் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, அந்த பணத்தை வேறு துறைக்கு மாற்ற முயற்சித்தனர்.இதனை கண்டித்து பா.ஜ. சார்பில், குடிமை பொருள் வழங்கல் துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், 30 தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவும் செய்யப்பட்டது.பா.ஜ.,வின் தொடர் போராட்டத்திற்கு அரசு பணிந்து இலவச அரிசிக்கு பதில் ரூ.100 கோடியை, பொது மக்களுக்கு வழங்க ஒதுக்கீடு செய்துள்ளது.