காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதி வேகவதி ஆறு அருகில், நிலத்தடி நீர் அதிகரிப்புக்காக, பொதுமக்கள் சார்பில், குளம் அமைக்கும் வேலை நடந்து வருகிறது.
இங்கு தோண்டப்படும் மணலை, சமூக விரோதிகள் திருடிச் செல்வதாக, அப்பகுதியினர், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு எஸ்.பி., கண்ணனிடம், நேற்று மனு அளித்தனர்.அதன் விபரம்:மாவட்ட கலெக்டர் அனுமதியுடன், எங்கள் பகுதியில் குளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு தோண்டப்படும் குளத்தின் மணலை, கரையை பலப்படுத்த கொட்டி வைத்துள்ளோம். இந்த மணலை, சிலர் திருடிச் செல்கின்றனர். இதை தடுக்க முயன்றால், மண் எடுப்போர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.மேலும், வேகவதி ஆற்று கரை அருகில் குளம் இருப்பதால், குளத்திலும் மணலை தோண்டி எடுக்கின்றனர். இதற்கு காரணமானோரை பிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.