புதுச்சேரி:தீபாவளி பரிசுக்கூப்பன் வழங்கக்கோரி, தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பரிசு கூப்பன் ரூ. 1000 வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டிற்கான தீபாவளி பரிசு கூப்பன் இதுவரை வழங்கவில்லை.இதனைக் கண்டித்தும், தீபாவளி பரிசு கூப்பன் உடன் வழங்க வேண்டியும், நலச்சங்கத்தை நல வாரியமாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 27 ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் கந்தசாமி, ஜனவரி 10 ம் தேதிக்குள் நல வாரியம் அமைக்கப்படும், தீபாவளி பரிசு தொகை ரூ. 1000 உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.இந்நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.500 பரிசுக் கூப்பன் வழங்க முடிவு செய்து, ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனைக் கண்டித்தும், தீபாவளி பரிசு ரூ.1,000ம் வழங்க வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட, அமைப்பு சாரா தொழிலாளர்கள் அறிவித்தனர்.அதன்படி, நேற்று காலை அமைப்பு சாரா தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமையில், தலைமை செயலகத்தை சுற்றி வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீஸ் தடுப்பை மீறி, தலைமை செயலகம் நோக்கி செல்ல முயன்றதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசை கண்டித்தும், கவர்னர், தலைமை செயலரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது, சேது செல்வத்தை போலீசார் கைது செய்து ஜீப்பில் ஏற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், கண்ணீர் புகைக்குண்டு வீச வாகனத்தை வரவழைத்தனர். ஆனாலும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. பின்னர் சேதுசெல்வத்தை ஜீப்பில் இருந்து இறக்கி விட்டனர். அதையடுத்து, தலைமை செயலகம் அருகே சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., அபிஷேகம், தினேஷ் பொன்னையா, பிரபுராஜ், சி.ஐ.டி.யூ., சீனிவாசன், மா.கம்யூ., முருகன், ராஜாங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தொழிற்சங்க முக்கிய நிர்வாகிகள் தலைமை செயலருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து செல்லப்பட்டனர்.தலைமை செயலர் அஸ்வனிகுமார், நிதிச்செயலர், தொழிற்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தெடார்ந்து, 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 7:00 மணியளவில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறி கலைந்து சென்றனர்.
ஓரிரு நாளில் ரூ. 1000 பரிசு கூப்பன்
பேச்சுவார்த்தை குறித்து ஏ.ஐ.டி.யூ.சி., சேதுசெல்வம் கூறுகையில், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தீபாவளி பரிசுக்கூப்பன் ரூ. 1000 வழங்குவதற்கான கோப்பு தயாரித்து, உடனடியாக வழங்கப்படும் என, உத்தரவாதம் அளித்தனர். முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் கந்தசாமி ஆகியோரும் உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE