மதுராந்தகம்:''கன மழை நிவாரணப் பணிகளை, அரசு தீவிரப்படுத்தி உள்ளது,'' என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன், மதுராந்தகம் ஏரியை பார்வையிட்ட பின், கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ஏரியில்,கன மழையால் தண்ணீர் வருகிறது. தமிழகத்தின், இரண்டாவது பெரிய ஏரியான இதை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன், பார்வையிட்டார்.ஏரிக்கரைப் பகுதி, மதகுகள் மற்றும் ஷட்டர், உபரி நீர் வெளியேற்றக்கூடிய கலங்கல் போன்றவற்றை ஆய்வு செய்த அவர், வெள்ள அபாயம் குறித்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமாக இருக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவ மழை, தமிழகத்தில் இயல்பான அளவு பெய்துள்ளது.வட மாவட்டங்களில் மழை குறைந்தாலும், தென் மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால், தாழ்வான பகுதிகள், கடற்கரை ஓரங்களில் வசிப்போர், பாதிப்பு ஏற்படும் இடங்களில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண பணிகளை வழங்கவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.நிரம்பும் ஏரிகள் குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மீட்பு பணிகளுக்காக, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகள் அருகே நின்று, 'செல்பி' எடுக்கக்கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.
செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.மதுராந்தகம் ஏரி, 23.3 அடி கொள்ளளவு, 2,420 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பரப்பு உடையது. கன மழையால், தற்போது, 22 அடியில் தண்ணீர் உள்ளது. தொடர்ந்து வரும் நீர்வரத்தால், இன்று, ஏரி, அதன் முழு கொள்ளளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.