புதுச்சேரி:ஆத்திச்சூடி சிறப்பு பள்ளியின் புதுச்சேரி கிளை திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகில் முத்துமாரியம்மன் கோவில் தெருவில், ஸ்வஸ்திக் அறக்கட்டளையின் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.இப்பள்ளியின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், கலெக்டர் அருண் குத்துவிளக்கேற்றி, ஆத்திச்சூடி சிறப்பு பள்ளியை துவக்கி வைத்து, பெயர் பலகையைத் திறந்து வைத்து பேசினார்.அறக்கட்டளை தலைவர் கபாலி ராஜகோபாலன், அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் இளவழகன், ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி நிறுவனர் சத்தியவண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.புதியதாக திறக்கப்பட்ட சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி, பேச்சுப் பயிற்சி, சிறப்பு கல்வி விளையாட்டு மற்றும் மியூசிக் தெரபி கற்றுத்தரப்படுகிறது. மேலும், காஞ்சிபுரம், சென்னை, வேலுார் மாவட்டங்களில்இந்தப் பள்ளியின் மூன்று கிளைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மிகச் சிறந்த நிபுணர்களைக் கொண்டு சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கைத்தொழில் கற்று தரப்படுகிறது. எனவே புதுச்சேரியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.