கோவை:டெங்கு காய்ச்சலுக்கு நேற்று ஒரே நாளில், 35 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு, 164 பேர் என, 199 பேர் கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்றனர்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இத்துடன் டெங்கு காய்ச்சல் பாதிப்பும், இணைந்து கொண்டுள்ளது.மாவட்டத்தில், கோவை மாநகரம், தொண்டாமுத்துார், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வைரஸ், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், டெங்கு காய்ச்சலுக்கு, கோவை, திருப்பூரை சேர்ந்த தலா, 17 பேர், ஈரோட்டை சேர்ந்த ஒருவர் என, 35 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.வைரஸ் காய்ச்சலுக்கு, 164 பேர் என, மொத்தம், 199 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, 35 பேரில், 31 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில், ''காய்ச்சல் பாதிப்புக்காக மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும், தேவையான சிகிச்சை வழங்கப்படுகிறது. நாள்பட்ட காய்ச்சலுடன் வரும் நோயாளிகளுக்கு, உடனடியாக டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு, வைரஸ் காய்ச்சல் நோயாளிகளுக்கு, சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவுடன், நோயாளிகள் மருத்துவமனைக்கு வர வேண்டும்,'' என்றார்.