கோவை:தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கு, தற்போதே சேர்க்கை துவங்கி விட்டது. எனவே அங்கீகாரமில்லாத பள்ளிகளின் பட்டியலை, கல்வித்துறை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) கீழ் இயங்கும் பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, மத்திய அரசிடம் முன்அனுமதி பெறாமல், பள்ளிகள் துவங்குவது அதிகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.இதனால், தமிழகம் முழுக்க உள்ள பள்ளிகளின் தகவல் திரட்ட, எமிஸ் எனும் பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் உருவாக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும், இதில் சேர்க்கப்பட்டு, பிரத்யேக அடையாள எண் அளிக்கப்பட்டுள்ளது.முன் அனுமதி பெறாத பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியல் வெளியிடாததால், பெற்றோர் தடுமாறுகின்றனர்.அடுத்த கல்வியாண்டுக்கு, பல முன்னணி பள்ளிகளில் தற்போதே, ஸ்கிரீன் டெஸ்ட் எனும், எழுத்துத்தேர்வு நடத்தப்படுகிறது. முன்பணம் செலுத்தி, சேர்க்கை உறுதி செய்து கொள்வதில் போட்டி நிலவுகிறது.முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது, ''கல்வித்துறை விதிமுறைகளை மீறி, பள்ளிகளின் செயல்பாடுகள் இருந்தால், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதோடு, அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE