பேரூர்:வெங்காயம் விலை ஏற்றத்தால், ஓட்டல்களில் ஆனியன் இல்லா ஆம்லெட் வழங்கப்படுகிறது. ஆனியன் தோசை, ரோஸ்ட்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், ஆனியன் பக்கோடா, தயிர் பச்சடியை பார்ப்பதே அரிதாகியுள்ளது.சமீப நாட்களாக வெங்காயத்தின் விலை, உச்சம் தொட்டு வருகிறது. தங்கத்தின் விலை ஏற்றத்தை தாங்கி கொள்ளும் மக்கள், வெங்காயத்தின் விலை உயர்வை தாங்கவே மாட்டார்கள்.
வல்லமை கொண்ட வெங்காயத்தின் விலை விளைச்சல் பாதிப்பு, அழுகல், நடவு, விசேஷ நாட்கள் உள்ளிட்ட காரணங்களால், பல சமயங்களில் ஏற்றம் காணும். தற்போது அதே நிலையால், ஒரு கிலோ, ரூ.100 முதல், 150 வரை விற்கப்படுகிறது.இதனால், தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் உள்ள ஓட்டல்களில் ஆம்லெட் கேட்டால், 'பிளைன் தான் இருக்கு...போடவா...' என்கின்றனர். ஆனியன் தோசை, ரோஸ்ட் ஆர்டர் செய்தால், 'சாதா மட்டும்தான் இருக்கு; வேணுமா' என்கின்றனர்.
இதுவே இப்படி என்றால், தயிர் பச்சடி, ஆனியன் பக்கோடா குறித்து சொல்ல வேண்டியதில்லை. சில ஓட்டல்களில் ஆம்லெட்டில் முட்டைக்கோஸ், வெள்ளரிக்காயை மிக்ஸ் செய்து சமாளிக்கின்றனர்.ஒரு ஓட்டல்காரர் கூறுகையில், 'நகரங்களை போன்று, கிராமங்களில் திடீரென விலையை உயர்த்த முடியாது. அப்படி செய்தால், ரெகுலர் கஸ்டமர்களை இழக்க நேரிடும். வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடையும் வரை, இப்படித்தான் சமாளித்தாக வேண்டியுள்ளது' என்றார்.