அன்று கலக்கியது; இன்று கலங்குகிறது! கவலைக்கிடமான | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அன்று கலக்கியது; இன்று கலங்குகிறது! கவலைக்கிடமான

Added : டிச 04, 2019
 அன்று கலக்கியது; இன்று கலங்குகிறது! கவலைக்கிடமான

அவிநாசி:கடந்த, 40 ஆண்டுக்கு முன், கதர்கிராம வாரியம் சார்பில், கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த, அவிநாசி அருகே கருவலுார், சேவூர் கைகாட்டி உட்பட மாவட்டத்தின் பல இடங்களில், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டப்பட்டன.அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், பஞ்சு இருப்பு வைக்க கட்டடமும் அமைக்கப்பட்டது. கதர் கிராம நூற்பாலை அமைக்கப்பட்டு, ராட்டை பொருத்தப்பட்டது. கதர் கிராம வாரியம் சார்பில் பஞ்சும் வழங்கப்பட்டது; ராட்டை உதவியால், அவற்றை நுாலாக மாற்றும் பணியில், ஏராளமான பெண்கள் ஈடுபட்டனர்; அதற்குரிய கூலி, கதர்கிராம வாரியம் சார்பில் வழங்கப்பட்டது.அவர்களால் தயாரிக்கப்படும் நுால், தறி உரிமையாளர்களால் கொள்முதல் செய்யப்பட்டு, துணி உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டது. வேட்டி, சட்டை, துண்டு, கதர் சேலை போன்றவை நெசவு செய்யப்பட்டன.கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், திருப்பூரில் பனியன் தொழில் காலுான்றி, ஆழமாக வேரூன்றியது; 'மளமள'வென நிறுவனங்கள் முளைத்தன; உற்பத்தி முழுக்க இயந்திரமயமானது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், 'ஜெட்' வேகத்தில் வளர்ந்தது.அதற்கேற்ப வேலைவாய்ப்பும் பெருகியதால், கதர் கிராம வாரியம் மூலம் கிடைக்கும் வருவாயைவிட கூடுதல் வருவாய்பனியன் தொழிலில் கிடைத்தது.அதன் விளைவு, தொழிலாளர் பலர், கதர் தொழிலை விட்டு, பின்னலாடை தொழிலுக்கு மாறினர்.தொழிலாளர் பற்றாகுறையால் பஞ்சு நுால் உற்பத்தி குறைந்தது; காலபோக்கில், கதர் வாரியமும் முடங்கியது. கதர் வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடமும், பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களும் பயனற்று, புதர்மண்டி கிடக்கின்றன.அவிநாசி, சேவூர் உட்பட இடங்களில் பல அரசுத்துறை அலுவலகங்கள் போதிய இடமின்றி, நெருக்கடியில் சிக்கியுள்ளன. எனவே, பயனின்றி, புதர்மண்டிக் கிடக்கும் விசாலாமான கதர்வாரிய கட்டடங்களை, பிற அரசு துறையினரின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்; அல்லது, அவற்றை புனரமைத்து, கலையரங்கம், சமுதாயகூடம், திருமண மண்டபம் போன்ற பிற பயன்பாடுக்கு வழங்க வேண்டும் என, பொதுமக்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X