திருப்பூர்:ஆண்டிபாளையம் குளக்கரையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள, சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி, நடந்து வருகிறது.திருப்பூர் ஆண்டிபாளையம் குளம், 46 ஏக்கரில், கடல் போல் காட்சியளிக்கிறது. குளத்தில் உள்ள, தீவு போன்ற திட்டுகளில், அடர்த்தியான மரம் வளர்ந்துள்ளதால், பறவைகளின் வாழ்விடமாக மாறியுள்ளது.
மாநகராட்சியின் மேற்கு பகுதிக்கான, நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் ஆண்டிபாளையம் குளக்கரையில், புதர்மண்டி காணப்படுகிறது.குளத்துக்கு மறுவாழ்வு கொடுத்த, 'வெற்றி' அமைப்பினர், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், தற்போதும் தொடர்ந்து பராமரிப்பு பணி செய்து வருகின்றனர்.இருப்பினும், குளக்கரையில் அமைக்கப்பட்ட அழகு கொஞ்சும் பூங்காவை முறையாக பராமரிக்க, மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இடையே 'பனிப்போர்' நீடித்து வருகிறது.இதற்கிடையில், 'வெற்றி' அமைப்பினர், மங்கலத்தில் இருந்து வரும், இரண்டு ராஜவாய்க்கால்களையும் துார்வாரி சுத்தம் செய்துள்ளனர்;
இதன் மூலம், குளத்துக்கு தண்ணீர் தடையின்றி வருகிறது. ஆண்டுக்கு இருமுறை, வாய்க்கால் தொடர்ந்து துார்வாரி சுத்தம் செய்யப்படுகிறது. அத்துடன், சீமைக்கருவேல மரம் அழிக்கும் பணியும், தொடர்ந்து நடந்து வருகிறது.'பொக்லைன்' உதவியுடன், குளத்தை ஆக்கிரமிக்க துடிக்கும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் செடிகளை, வேருடன் அகற்றுவதில், தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம், 'பொக்லைன்' மூலமாக, குளக்கரையை சுற்றிலும் உள்ள, சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.