செஞ்சி:வல்லம் ஒன்றியத்தில் மழை சேத பகுதிகளை டாக்டர் மாசிலாமணி எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.
செஞ்சி தாலுகாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. வல்லம் ஒன்றியத்திலும் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் பல 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.தொண்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பனப்பாக்கம் கிராமத்திலிருந்து அருகாவூர் செல்லும் சாலையிலும், அவியூர் கிராமத்தில் இருந்து போந்தை செல்லும் சாலையிலும் கடந்த மூன்று தினங்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அருகாவூர் பள்ளி குளம், சிவனந்தல், மேல் கூத்தப்பாக்கம் உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் தடைபட்டுள்ளது.தகவலறிந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., மாசிலாமணி நேற்று இந்த கிராமங்களில் ஆய்வு செய்தார்.அருகாவூர், அவியூர் தரைப்பாலத்தில் பொதுமக்களிடையே எம்.எல்.ஏ., பேசுகையில், அவியூரில் 8 கோடி ரூபாய் மதிப்பிலும், அருகாவூரில் 6 கோடி ரூபாய் மதிப்பிலும் நபார்டு கிராமப்புற சாலைகள் துறை மூலம் விரைவில் கட்ட உள்ளனர் என தெரிவித்தார்.மேலும், மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விரைவாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டார்.
பயிர் சேதமான விவசாயிகளிடம் கலெக்டரை சந்தித்து இது குறித்து மனு கொடுப்பதாக உறுதியளித்தார்.ஆய்வின் போது தி.மு.க., ஒன்றிய செயலர் அண்ணாதுரை, பொருளாளர் தமிழரசன், ஒன்றிய நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஹரிதாஸ், பரசுராமன், ராஜலிங்கம், பெருமாள், கோவிந்தராஜ், கிளை நிர்வாகிகள் சிலம்பரசன், ஏழுமலை, அர்ஜூனன், பாஸ்கர், ராமச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.