உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டையில் கண்டன போராட்டத்திற்கு அனுமதி மறுத்தும், போராட்டம் நடத்த குவிந்த போராட்டக்காரர்களிடம் டி.எஸ்.பி., பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
உளுந்துார்பேட்டை பேரூராட்சியில் மந்தமாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பழுதான சாலையை தரமான முறையில் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.ஆனால், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதனால் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசங்கர் தலைமையில் தி.மு.க., ஒன்றிய செயலர் வசந்தவேல், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் சரவணன், மா.கம்யூ., நகர செயலர் தங்கராசு உட்பட 40க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:00 மணியளவில் உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன் திரண்டனர்.தகவல் அறிந்த டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் நேரில் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.