திருப்பூர்:'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில் பள்ளி மாணவருக்கான வினாடி- வினா போட்டி, திருப்பூர், விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது.'தினமலர், 'பட்டம்' இதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து, 'பதில் சொல் -- அமெரிக்கா செல்' எனும் வினாடி - வினா போட்டிகளை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், 100க்கு மேற்பட்ட பள்ளிகளில் நடத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடம் பெறும் இரண்டு மாணவர்கள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவர். இறுதி போட்டியில், முதல் பரிசு பெறும் அணிக்கு அமெரிக்காவில் உள்ள, 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை, நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.திருப்பூர், விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த தகுதிச்சுற்று தேர்வில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.இதில், சிறப்பாக பங்காற்றிய, 16 பேர், 'ஏ, பி, சி, டி, இ, எப், ஜி, எச்' என, எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். இவ்வணிகளுக்கு மூன்று சுற்றுகளாக, வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. இதில், 'எப்' அணியை சேர்ந்த கீர்த்திகா, பாவனா, முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவருக்கு, தாளாளர் முருகசாமி மெடல், கேடயம் மற்றம் சான்றிதழ் வழங்கினார். பள்ளி நிர்வாக அலுவலர் மேரி, முதல்வர் ராஜலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் சங்கீதா, ஆசிரியர் நாகலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.l தொடர்ந்து, காங்கயம் ரோடு அருகேயுள்ள, பாரதிய வித்ய பவன் பள்ளியில் நடந்த எழுத்துத்தேர்வில், 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 'ஏ' அணியை சேர்ந்த ஸ்ரீவெங்கடேசன், ரதீன் முதலிடம் பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவருக்கு, பள்ளி நிர்வாக அலுவலர் அஸ்வின் மெடல், சான்றிதழ், கேடயம் வழங்கினார். ஆசிரியர்கள் சவுமியா, ப்ரீத்தி, கவிதாமணி, மாலதி ஆகியோர் பங்கேற்றனர்.