கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய பகுதியான கவரைத் தெருவில் ஜல்லிகள் பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி நகரில் கவரைத் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சிவன், பெருமாள், கணபதி, மாரியம்மன், திரவுபதி அம்மன் ஆகிய கோவில்களுக்கு மட்டுமின்றி; மந்தைவெளி வழியாக சின்னசேலம் பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகம் செல்வதற்கான முக்கிய சாலையாகவும் உள்ளது.இந்த சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மாவட்ட தலைநகராக மாறியுள்ள கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய வீதி பழுதாகியுள்ளதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும், தற்போது பெய்து வரும் மழை காரணமாக சாலை நடுவே உள்ள பள்ளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளை சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடக்கிறது.எனவே, பழுதடைந்த இந்த சாலையை சீரமைத்து பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தும் விதமாக, மேம்படுத்திட துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.