ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்ததால் உள் நோயாளிகள் கூடுதல் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உச்சிப்புளி பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தொடர் மழையால் வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இங்கு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அனைத்து வசதிகள் இருந்தும் மழை நீர் தேங்கியுள்ளதால் உள் நோயாளிகளுக்கு மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளதால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் பலர் பாதி சிகிச்சையுடன் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். வெளி நோயாளிகளாக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். சுகாதார நிலையத்தில் மழை நீர் தேங்கியிருப்பதால் அவதிப்படுகின்றனர். தேங்கியுள்ள தண்ணீரில் தள ஓடுகளை அடுக்கி தற்காலிக பாதை அமைத்துள்ளனர். இங்கு பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் அனைவரும் வேறு வழியின்றி தேங்கிய நீருக்குள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகதார நிலையத்தில் தேங்கி உள்ளமழை நீரை அப்புறப்படுத்தி நோயாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்த பழமையான ஆல மரம் கன மழையால் நேற்று அதிகாலை வேரோடு சாய்ந்தது. அதிகாலை 5:00 மணி என்பதால் அப்பகுதியில் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அந்த மரத்தை அகற்றும் பணிகள் நடந்தது.