சூலுார்:சூலுார் வட்டாரத்துக்கான, உள்ளாட்சி பதவிகளுக்கான, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வரும், 27 மற்றும், 30ம் தேதிகளில், தமிழகத்தில் இரு கட்டங்களாக ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 6ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. 13ம் தேதி கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி பொறுப்புகளை கைப்பற்ற அரசியல் கட்சியினர் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில், சூலுார் வட்டாரத்தில், 17 ஊராட்சி தலைவர் பதவிகள், 14 யூனியன் கவுன்சிலர்கள், 171 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, அரசு அதிகாரிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாகியுள்ளனர். கிராம ஊராட்சி தலைவருக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, துணை பி.டி.ஓ.,க்கள் சரவணன், விஜயகுமார், சண்முகப்பிரியா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு அதிகபட்சமாக ஆறு ஊராட்சிகள் ஒதுக்கப்படும்.யூனியன் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் துரைசாமியும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, பி.டி.ஓ., சுப்புலட்சுமி(ஊராட்சிகள்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, வருவாய், வேளாண்துறை உள்ளிட்ட, 17 பேர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.