செஞ்சி:நாட்டார்மங்கலம் கூட் ரோட்டில் மழைநீர் வெளியேற வழியின்றி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்பதுடன் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் இருந்து அவியூர் செல்லும் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையை புதுப்பித்தனர். அப்போது, சாலையின் குறுக்கே ஓடைக்கு தண்ணீர் செல்ல அமைத்திருந்த சிறிய கல்வெர்ட்டை மூடிவிட்டனர்.இதனால் செஞ்சி - திண்டிவனம் தேசிய நெஞ்சாலையில் நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் இருந்து மழை நீர் வெளியேற வழியின்றி சாலையிலேயே தேங்கியது. இதன் காரணமாக தார் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறியது.அத்துடன் இங்கிருந்து செல்லும் மழைநீர் வடக்குப்புறம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளையும் சூழ்ந்தது. அதிக மழை பெய்யும்போது அவ்வப்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.ஒவ்வொரு முறை கனமழையின் போதும் வீடுகளில் தண்ணீர் புகுவதால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஏற்கனவே ஓடைக்கு மழைநீர் செல்லும் பாதையை சரி செய்து, சாலையின் குறுக்கே கல்வெர்ட் அமைத்து மழை வெள்ளம் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.