வால்பாறை:மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் வெங்காய விலையை கண்டு தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகுதிக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகிறது.இந்நிலையில் இந்தாண்டு, கடும் மழைப்பொழிவால், மகாராஷ்டிராவில் வெங்காய விளைச்சல் மற்றும் அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த அக்டோபர் மாதம் முதல், வெங்காய விலை படிப்படியாக உயரத்துவங்கியது.ஒரு கிலோ சின்ன வெங்காயம், 160 ரூபாய்க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம், 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், குறைந்த கூலியில் எஸ்டேட் பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வெங்காயத்தை விலை கொடுத்து வாங்க முடியாமல், அவதிப்படுகின்றனர்.குறைவான சம்பளத்தில், தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து பிழைத்து வரும் தங்களுக்கு, அரசு, கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம், குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும். மேலும், விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று வலியுறுத்தியுள்ளனர்.