மடத்துக்குளம்:பண்ணைக்குட்டைகள் அமைப்பதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசனநீர் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளது.மடத்துக்குளம் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதியில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கான பாசன நீர் ஆதாரமாக அமராவதிஅணை உள்ளது. ஆனால், புதிய ஆயக்கட்டு பகுதியில் பாசனநீர் பற்றாக்குறை நீடித்து வருகிறது.இந்த ஆயக்கட்டில் கிணற்றுப்பாசனமே அதிகமாக உள்ளது. இதனால் கிணறு நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே, பாசனநீர் தேவையை ஈடுகட்டும். இதற்கு தீர்வாக மழைநீரை சேமிக்கும் பண்ணைக்குட்டைகள் அமைப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தேவையான அளவு நீளம், அகலம், ஆழத்தில் பரப்பில், பள்ளம் தோண்ட வேண்டும். அருகிலுள்ள வீடுகள் மற்றும் நிலத்தில் விழும் மழைநீரை குட்டையில் சேமிக்கும் விதமாக, குழாய்கள் பதிக்க வேண்டும்.மழை பெய்யும் போது, பல இடங்களுக்கு மழைநீர் வழிந்தோடி வீணாகாமல், இந்த பண்ணைக்குட்டையில் சேமிக்கும் விதமாக குழாய்கள் அமைக்க வேண்டும்.இப்படி சேகரிக்கப்படும் நீர், நிலத்தடியிலுள்ள நீர் கால்கள் மூலமாக அருகிலுள்ள கிணறு, ஆழ்குழாயில் கலந்து, நீர்மட்டத்தை உயர்த்தும்.இவ்வாறு, கூறினர்.