ஸ்ரீவில்லிபுத்துார்:ரோட்டின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்ற பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் ஸ்ரீவில்லிபுத்துார் மங்காபுரம் மக்கள் தினமும் பாதிப்பை சந்திக்கின்றனர். .
இப்பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்தும் முறையான ரோடு வசதி இல்லாமல் மழை பெய்தால் சகதி, வெயில் அடித்தால் புழுதி என்ற நிலையில் தான் மக்கள் நடந்து செல்கின்றனர். முதியவர்கள், மாணவர்கள் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். முறையான கழிவுநீர் வாறுகால்கள்இல்லாததால் வீட்டு கழிவுகள் வெளியேற வழியில்லாமல் தேங்கி கிடக்கின்றன. சுகாதாரக்கேடும், துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. கொசுக்கள் அதிகரித்து நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
ரோட்டின் நடு மையத்தில் இருக்கும் மின்கம்பத்தால்ஆட்டோக்கள்செல்லமுடியாநிலை உள்ளது. இதனால் அவசர காலங்களில் மக்கள் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் முறையான கழிவு நீர்வாறுகால், ரோடு, மின்விளக்குவசதி செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
முறையான ரோடு வசதி கோரி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நடக்கவும், டூவீலரில் செல்ல முடியாத நிலை பல மாதங்களாக நீடிக்கிறது. காலதாமதமின்றி அடிப்படை வசதி செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோதிகுமார், குடியிருப்பாளர், ஸ்ரீவில்லிபுத்துார்.
ஏற்கனவே ரோடு , கழிவுநீர் வாறுகால் இல்லாமல் தவிக்கிறோம். இதில் வேறு போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இரவு நேரங்களில் தட்டுத்தடுமாறி தான் செல்ல வேண்டியுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
- பெரியசாமி, குடியிருப்பாளர்,ஸ்ரீவில்லிபுத்துார்.
குடியிருப்பு பகுதியில் முறையான கழிவு நீர் வாறுகால் இன்றி ரோட்டில் தான் கழிவு நீர் செல்கிறது. பல இடங்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு, துர்நாற்றம், கொசுத்தொல்லைஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.
- பாண்டீஸ்வரி, குடியிருப்பாளர், ஸ்ரீவில்லிபுத்துார்.
உரிய அடிப்படை வசதிகள் செய்துதர விரைவில் நடவடிக்கை எடுக்கபடும்.
-சந்திரபிரபா, எம்.எல்.ஏ., ஸ்ரீவில்லிபுத்துார்.