சென்னை: தமிழகத்தில், கன மழை குறைந்துள்ள இடங்களில், ேலசான முன் பனிக்காலம் துவங்கியுள்ளது.
தமிழகத்தில் ஜூன் முதல் செப்., வரை, தென் மேற்கு பருவ மழை காலம். இந்த காலத்தில், தென் மாவட்டங்களிலும், காவிரி வடிகால் பகுதிகளிலும், அதிக மழை பெய்யும். அக்., முதல் வட கிழக்கு பருவ மழை காலம். தமிழகம், புதுச்சேரியில், தற்போது வட கிழக்கு பருவ மழை காலம் நிலவுகிறது. இதுவரை நான்கு கட்டங்களாக பருவ மழை பெய்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன் தீவிரம் அடைந்த மழை, படிப்படியாக குறைந்துள்ளது. தென் மாவட்டங்களில் மட்டும் மிதமாக பெய்கிறது.
இந்நிலையில், மழை குறைந்த பகுதிகளில், லேசான முன்பனி காலம் துவங்கியுள்ளது. வழக்கமாக, தமிழ் ஆண்டு அட்டவணைப்படி, மார்கழி, தை மாதங்களில், பனி தீவிரமாக இருக்கும். இதன் முன்னோட்டமாக, தற்போது கார்த்திகை மாதத்திலேயே, லேசான பனி துவங்கியுள்ளது.வரும் நாட்களில் மழை அளவு சற்று குறைந்து காணப்படும் என, வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளதால், பனி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:கடலோர மாவட்டங்களில், இன்று லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வரையிலான வேகத்தில் சூறை காற்று வீசுவதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. செந்துறை, கும்பகோணம், நன்னிலம், 3; குடவாசல், திருவிடை மருதுார், ஆலங்குடி, செய்யூர் மற்றும் சேரன்மகாதேவியில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.