சென்னை: 'பஞ்சாப் அரசை பின்பற்றி, பெண்களை பாதுகாக்க, போலீஸ் வாகனங்களை, மத்திய - மாநில அரசுகள் இயக்க வேண்டும்' என, தமிழ்நாடு முஸ்லிம் லீக், கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் தலைவர் முஸ்பா வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, குற்றம் இழைத்தோருக்கு, கடும் தண்டனை கொடுக்கப்பட்டு வந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆண்களுக்கு நிகராக, பல்துறை வல்லுனர்களாக, பெண்கள் உருவெடுத்து வரும், இந்த நவீன யுகத்தில், பெண்களின் மீதான ஆணாதிக்கம் மாறியபாடில்லை. இந்தியாவில் ஆண்டுதோறும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என, ஐ.நா., புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க, பல்வேறு சட்டங்கள் வந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே, 'இரவு, 9:00 முதல் காலை, 6:00 மணி வரை, வேலைக்கு செல்லும் பெண்களை, பத்திரமாக வீட்டில் இறக்கி விட, இலவசமாக காவல் துறை வாகனங்கள் இயக்கப்படும்' என, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இதை பின்பற்றி, அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும், இலவச வாகனங்களை, காவல் துறை பாதுகாப்புடன் இயக்கி, பெண்கள் பாதுகாப்பை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.